போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு பயிற்சி: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம்ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடி செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில் அளித்துப் பேசியதாவது:

அரசு துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு காலி பணியிடங்கள் (பேக்லாக் வேகன்சி) கண்டறியப்பட்டு அவற்றை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் 1,070 ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் உள்ள 452 ஆசிரியர் காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

துரித மின்இணைப்பு திட்டத்தின் (தத்கால்) கீழ் 1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்குவதற்காக ரூ.23.23 கோடி வழங்கப்படும்.

வீடு இல்லாத தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வாங்க ரூ.55 கோடி மானியம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் படித்து வரும் 7,600 ஆதிதிராவிடர் மாணவர்கள், 2,400 பழங்குடியின மாணவர்கள் என 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மொழித்திறன், திறனறித் தேர்வுகள், குழு விவாதம் ஆகியவற்றில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வாயிலாக ரூ.10 கோடி செலவில் அந்த பயிற்சிகள் நடத்தப்படும்.

2 ஆயிரம் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.50 கோடி செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

நிலமற்ற 200 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16.26 கோடி செலவில் மாதிரி பள்ளிகளாக (மாடல் ஸ்கூல்) தரம் உயர்த்தப்படும்.

தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 500 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.7.50 கோடியில் கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.

இதர நலவாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்,பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.