திண்டுக்கல்லை ஆட்டிப்படைத்த குட்டைக்கொம்பன் யானை; 100வது ஆபரேஷனில் வெற்றி பெறுமா கும்கி யானை கலீம்?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலக்குண்டு, நத்தம் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த வனப்பகுதிக்குள் யானை மட்டுமல்லாது சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக வசிக்கின்றன.

பொதுவாக, கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் மலை அடிவாரங்களில் உள்ள விளைநிலங்களிலும் குடியிருப்புகளிலும் புகும். இதில் வனவிலங்கு-மனித எதிர்கொள்ளல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிகளில் அதிகம் நடந்து வருகிறது.

குளிக்கும் சின்னத்தம்பி

குறிப்பாக, கன்னிவாடி வனப்பகுதியையொட்டியுள்ள பண்ணைப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் தொந்தரவு தாங்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்தனர். அதற்கேற்றாற்போல, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மாதம்கூட வனப்பாதுகாவலர் சுந்தரம் கோம்பை அருகே சுற்றித்திரிந்த யானைகளை விரட்டியபோது யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்துதான் வனத்துறை அப்பகுதியில் உள்ள யானைகளை விரட்ட பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் இருந்து கும்கிகளான கலீம் மற்றும் சின்னத்தம்பி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சின்னத்தம்பி

சின்னத்தம்பிக்கு முதல் ஆபரேஷன்,

கலீமுக்கு நூறாவது ஆபரேஷன்…

அட்டகாசம் செய்யும் யானைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் கில்லாடி எனப் பெயர் பெற்ற கும்கியான கலீமுக்கு இது நூறாவது ஆபரேஷன் ஆகும். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் யானை ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்ட 57 வயதான கலீம் மிகுந்த அனுபவம் கொண்டது.
ஆனால், கோவையில் விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி யானை பெரும் போராட்டத்துக்குப் பிறகு, 2019-ல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அந்த சின்னத்தம்பிக்குத்தான் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு, கும்கியாக மாற்றப்பட்டுள்ளது. சின்னத்தம்பிக்கு கன்னிவாடி ஆபரேஷன்தான் முதல்முறை என்பதால், கலீமுக்குத் துணையாக மட்டுமே பயன்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோம்பை

கலீம் மற்றும் சின்னத்தம்பிக்கு பயிற்சியளித்த பாகன் மணியிடம் பேசினோம். “கோவையில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி டாப்சிலிப்புக்கு கொண்டுசென்று விடப்பட்டது. பிறகு, அங்கிருந்து சின்னத்தம்பி வனத்துக்குள் விடப்பட்டது. மீண்டும் அதன் சேட்டை தொடங்கியதால் உடுமலைப்பேட்டை வனத்துக்குள் வைத்து சின்னத்தம்பியை மீண்டும் பிடித்து வந்து டாப்சிலிப்பில் சேர்த்தோம். அங்கு முறையாகக் கும்கி ஆவதற்கான கூண்டு மற்றும் வெளிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆபரேஷன் நடக்கும் போது யானைகளிடம் சண்டை போட வேண்டிய சூழல் அதிகம் உண்டு. அதற்கான பயிற்சிக்காகவே சின்னத்தம்பியை இங்கு அழைத்து வந்துள்ளோம். ஆபரேஷன் நடக்கும்போது கலீம் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதை சின்னதம்பி பார்த்து கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே கலீமால் யானை ஆபரேஷனில் ஈடுபட முடியும். அதற்காகவே சின்னத்தம்பியை கலீம் போல உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பாகன் மணி

கன்னிவாடி மலையடிவாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்ட இடங்களுக்கு கலீம், சின்னத்தம்பியை அழைத்துச் சென்று வந்தோம். குட்டைக்கொம்பன் மற்றும் அதனுடன் சுற்றும் யானைகள் கும்கிகளின் வாசனையைப் பிடித்து கும்கி முகாம் பகுதிக்கு வர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வந்தால் முகாம் பகுதியில் வைத்தே குட்டைக் கொம்பனை பிடித்துவிடலாம். கடந்த 2 நாள்களாக முகாம் அமைக்கப்பட்டுள்ள முத்துப்பாண்டி கோயில் பகுதிக்கு யானைகள் வந்தன. மீண்டும் வர வாய்ப்புண்டு.

கும்கி

கலீமை முகாமுக்கு அழைத்து வந்த அன்று இரவு கோம்பைப் பகுதியில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாக உள்ளூர் வனத்துறையினர் தெரிவித்தனர். அரைமணி நேரத்தில் நாங்கள் அங்கு சென்றோம். குட்டைக் கொம்பன் மலையிலிருந்து இறங்கி அந்த வீட்டின் பின்பகுதியை உடைத்து அரிசி, உப்பை, புளியை தின்றுவிட்டு அருகே உள்ள விளைநிலத்தில் நின்று கொண்டிருந்தான். அந்த வீட்டினுள் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். யானை மட்டும் வீட்டின் முன்பகுதியில் நுழைந்திருந்தால் 4 பேரும் பலியாகி இருப்பார்கள். அவர்கள் கட்டிலுக்கு அடியே படுத்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்ததால் நாங்களும் விரைந்து வந்தோம். அதற்குள் குட்டை கொம்பன் சோலார் வேலியை உடைத்துக்கொண்டு தப்பிவிட்டான்.

தற்போது குட்டைக்கொம்பன் 8 யானைகளுடன் சேர்ந்து தான் உள்ளான். தனியாக இருந்தால் தான் மிகவும் பயப்பட வேண்டியிருக்கும். எனவே அதிகாரிகளின் உத்தரவு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

செந்தில்குமார்

பாதிக்கப்பட்ட விவசாயி செந்தில்குமாரிடம் பேசினோம். “கன்னிவாடி அருகே பண்ணைபட்டி, கோம்பைப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் குட்டைக்கொம்பனால் 3 உயிர்கள் பலியாகியுள்ளன. இப்பகுதிகளில் தென்னை, வாழை, இலவம், மா, முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும், பல ஏக்கர் விளைநிலங்களை பாழாக்கி வருகின்றன. என்னுடைய மா தோட்டத்தில் மட்டும் 2 நாள்களுக்கு முன்பு 30 மா மரங்களை உடைத்துப் போட்டுவிட்டு சென்றன. குடியிருப்புகளிலும் புகுந்து அரிசி, புளி, உப்பு போன்றவற்றை எடுத்து விரும்பி சாப்பிடுகின்றன. ஆனால், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை யானை எதுவும் செய்வது இல்லை. சோலார் வேலி அமைத்தும் எவ்வித பயனும் இல்லை.

மாலை 6 மணிக்கு மேல் யாரும் தோட்டங்களில் நடமாட முடியாது. யானைகளை விரட்டுவதால் மிகவும் கோவம் கொள்கின்றன. மிகுந்த ஆக்ரோஷத்துடன் கத்துகின்றன. குறிப்பாக, குட்டைக் கொம்பன் மிகவும் பொல்லாதவன். குட்டைக் கொம்பன் மட்டுமே ஒரே நேரத்தில் 100 தென்னை மரங்களை சாய்த்துவிடுவான். தற்போது வந்துள்ள இரண்டு கும்கிகளை சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்கும். அதுபோன்ற வாட்ட சாட்டமான தோற்றத்தைக் கொண்டவன். அவன்தான் வனப்பாதுகாவலரான சுந்தரத்தைக் காலால் மிதித்துக் கொன்றான். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், தேவையான உணவு கிடைப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக இவ்விடத்தை விட்டு யானைக் கூட்டம் வெளியேறாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இப்பகுதி மக்கள் வீடுகளில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை” என்றார்.

சின்னத்தம்பி

கன்னிவாடி வனச்சரக ரேஞ்சர் சக்திவேலிடம் பேசினோம். “வனத்துறையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழு யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். மேலதிகாரிகளுக்கு யானையைப் பிடிக்க அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது யானைகளால் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். தோட்டங்களை சேதப்படுத்தாதவாறு விரட்டி வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.