- இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞருமான ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் இன்று (மே 7). அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-
- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் – சரளாதேவி இணையரின் மகனாக கல்கத்தாவில் ஜோரசங்கோ மாளிகையில் 07.05.1861 அன்று ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். அவருடைய தாத்தா துவாரகாநாத் புகழ்பெற்ற செல்வந்தர். சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் நண்பர் இவர்.
- இயல்பாகவே மிகவும் முற்போக்கான, கலைக்குடும்பம் தாகூருடையது. தாகூரின் தந்தையான தேவேந்திரநாத்சமஸ்கிருதம், பாரசீகம், இந்திய, மேற்கத்தியத் தத்துவங்களில் அறிஞர். பிரம்ம சமாஜக் கொள்கைவாதியான தந்தை எழுதிய ‘பிரம்மோ தர்மா’ என்ற நூலை தாகூர் அடிக்கடி படித்து, அதிலிருந்து உத்வேகம் பெற்றார்.
- இமயமலைக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவரான தேவேந்திரநாத்துடன் இளம் ரவீந்திரர் 1873ஆம் ஆண்டு முதன்முறையாகப் போனார். மலைப் பகுதிகளில் சிறுவன் ரவீந்திரன் சுதந்திரமாக ஓடித்திரிய முடிந்தது. ஊர் திரும்பியபோது அமிர்தசரஸ் வழியாக டல்ஹவுசி மலைப்பகுதி, சாந்திநிகேதன் (இங்கு தேவேந்திரநாத்துக்குச் சொந்தமான நிலம் இருந்தது) ஆகிய இடங்களுக்கும் தந்தை அழைத்துப்போனார். இத்தகைய பயணங்களின் தாக்கம் ரவீந்திரரின் வாழ்நாள் முழுக்க இருந்ததைக் காண முடிகிறது. 1875இல் பள்ளிக் கல்வியில் வெறுப்புற்று விலகினார். தாயார் மறைவும் இதே ஆண்டில் நிகழ்ந்தது.
- கவிஞர், இசைக்கலைஞர், நாடகாசிரியர், ஓவியர், கல்வியாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டிருந்த தாகூர் பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர். வீட்டிலேயே கல்வி பயின்றவர். 1879இல் லண்டனில் சட்டம் பயிலப்போனபோது, ஓராண்டில் அதை விட்டுத் திரும்பியவர். மிருணாளினி தேவியுடன் இவரது திருமணம் 1883 ஆண்டில் நடைபெற்றது. இவரின் அண்ணி காதம்பரி தேவி 1884இல் தற்கொலை செய்துகொண்டது ரவீந்திரரைத் தாக்கிய சோகங்களுள் ஒன்று. அடுத்தடுத்து இவருடைய மனைவி, மகள் ரேணுகா, இவரின் இளைய மகன் ஷமிந்திரா, தந்தை, மகள் பேலா, இரு சகோதரர்கள், ஒரே பேரன் நிதிந்திரா – இவ்வளவு பேரையும் பறிகொடுத்தவர். ஏதோ ஓர் உத்வேகத்துடன் அத்தனை இழப்புகளையும் தாண்டி தொடர்ந்து இயங்கியவர்.
- 1890இல் தந்தையின் கட்டளையை ஏற்று, குடும்பத்திற்குச் சொந்தமான ஜமீன்கள், பண்ணைகள், நிலங்களின் நிர்வாகப் பொறுப்பை மேற்கொண்டார். இது, அந்த இடங்களில் வாழ்ந்த எல்லாவிதமான மனிதர்களுடனும் நேரடியாகப் பழகிப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. சாந்தி நிகேதனில் தன் முதலாவது கல்வி நிலையத்தை 1901இல் அவர் தொடங்கினார். மனைவி மிருணாளினி தேவி 1902இல் மறைந்தார்.
- 1911இல் இவர் இயற்றிய இசையமைத்த ‘பாரத பாக்ய விதாதா’ என்னும் வங்க மொழிப் பாடலின் முதல் சரணமே சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.
- தாகூரின் ’கீதாஞ்சலி’ கவிதைகளின் வங்காள மொழிப் பதிப்பு, முதன்முறையாக 1910இல் வெளியானது. அடுத்து ஆங்கில மொழியில் 1912ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டார். கீதாஞ்சலி தொகுப்பு உலகளாவிய புகழ்பெற்றதுடன், 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றத் தந்தது. ஆங்கிலேய அரசு இவருக்கு ’நைட்ஹூட்’ விருதை 1915இல் வழங்கியது. இந்த ஆண்டில்தான் மகாத்மா காந்தியை சாந்தி நிகேதனில் முதன்முறையாகச் சந்தித்தார் தாகூர்.
- ஜலியான் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து 1919இல் ஆங்கிலேய அரசு தனக்களித்திருந்த பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
- விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை 1920 -21ஆம் ஆண்டுகளில் சாந்தி நிகேதனில் நிறுவினார் தாகூர். இந்த ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டம் உள்பட எல்லா அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டார். தன் அறுபத்தேழாம் வயதில், 1928ஆம் ஆண்டில் ஒவியங்களைத் தீட்டத் தொடங்கினார். உலகின் முக்கிய நகரங்களில் இவருடைய ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. நாற்பத்தியோரு நாடகங்களை எழுதியவர் தாகூர். அவற்றில் பெரும்பாலானவற்றை இவரே இயக்கி, நடிக்கவும் செய்தவர்.
- இவருடைய மேடை நாடகங்கள், இசை- நாட்டிய நாடகங்கள், ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள், கல்விச் சிந்தனைகள் ஆகியவை முப்பது பெருந்தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ‘கோரா’, ‘போஸ்ட் மாஸ்டர்’, ‘சஞ்ஜாயிதா’, ‘கீதாஞ்சலி’ – போன்றவை புகழ்பெற்ற படைப்புகள். உலகம் முழுவதும் பல முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கெல்லாம் சிறப்புரைகள் நிகழ்த்தியவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்பட பல வெளிநாட்டு, இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாகூருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கியுள்ளன.
- எண்பது ஆண்டு நிறை வாழ்க்கைக்குப்பின் உடல்நலம் குன்றிய தாகூர், 07.08.1941 அன்று மறைந்தார்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription