திருத்தணி அருகே இரட்டிப்பு வட்டி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி ஆயிரக் கணக்கானோரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைமறைவானது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சந்தானகோபாலபுரம் கிராமத்தில் நோபல் பவுன்டேசன் என்ற பெயரில் டிரேடிங் கம்பெனியை கலைமாமணி என்பவர் நடத்தி வந்துள்ளார். இங்கு ரூ1 லட்சம் கட்டினால் மாதம் தோறும் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி திருத்தணி ம்ற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூனிமாங்காடு, சந்தானவேணுகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் உறப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து ஆரம்பத்தில் 3 மாதங்கள் வரை வட்டியை கொடுத்த நிர்வாகம் கோடிக் கணக்கில் பணம் சேர்ந்ததும் வட்டி தருவதை நிறுத்திவிட்டனர். இதனால் அடிக்கடி நோபல் பவுன்டேசன் நிறுவனம் செயல்பட்டு வந்த பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதோடு நிறுவனத்தில் உள்ள பொருட்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
இந்நிலையில் பூனிமாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் டிஜிபி மற்றும் திருத்தணி எம்எல்ஏ., ஆகியோருக்கு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுக சிறுக சேமித்த பணத்தை டிரேடிங் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி 7 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாகவும், இதுவரை வட்டியும் அசலும் தராமல் ஏமாற்றி வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வர் வீட்டருகே வருகிற 14.5.2022 அன்று தனது இறுதி ஊர்வலம் நடைபெறும் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவரை போன்ற 500-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏமாந்த நிலையில் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது போன்ற நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM