திருப்பதி:
திருப்பதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான குளிர்காற்று வீசியது.
மாலை 5 மணியளவில் திடீரென சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் கோவிந்தராஜ சாமி கோவில் தேர் மீது மூடப்பட்டிருந்த இரும்பு தகடுகள் காற்றில் அடித்துச் சென்றன. இரும்புத் தகடுகள் காற்றில் அடித்துச் செல்லும் போது தேர் மீது விழுந்து தேர் சேதம் அடைந்தது.
சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. வீட்டின் மாடியில் போடப்பட்டிருந்த கட்டில் ஒன்று தூக்கி சென்று மின்சார கம்பி மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரமின்றி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி வந்த பக்தர்கள் சூறைக்காற்று மற்றும் மழையில் சிக்கி அவதி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 63,265 பேர் தரிசனம் செய்தனர். 31, 217 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.50 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.