சென்னை: திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மாநகராட்சிகளில் நல்வாழ்வு மையம் உள்ளிட்ட 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றினார். அப்போது ஓராண்டு காலத்தில் செய்த திட்டங்களைப் பட்டியலிட்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து 5 புதிய திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்களின் விவரம் பின்வருமாறு:
காலை சிற்றுண்டி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை தூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்: ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள இணை உணவு வழங்கப்படும். மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்.
தகைசால் பள்ளிகள்: டெல்லியில் உள்ள மாடல் பள்ளிகளைப் போல் தமிழத்தில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 25 மாநகராட்சிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் (school of excellence) உருவாக்கப்படும். நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறந்த கல்வியோடு கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியனவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்பள்ளிகளில் நிச்சயமாக விளையாட்டு மைதானம் இருக்கும்.
நகர்ப்புற நல்வாழ்வு மையம்: ஒருங்கிணைந்த தரமான மருத்துவச் சேவைகள் வழங்க 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் நகர்ப்புற நல்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இங்கு புறநோயாளிகள் பிரிவு செயல்படும். இந்த நிலையங்களில் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் உள்பட 4 பேர் பணியில் இருப்பர். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கை தமிழகம் எட்டும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்: 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்கு தேவையான 10 முக்கியமான திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டம் நேரடியாக எனது கட்டுப்பாட்டில் செயல்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.