சேலம், வாழப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் சன்மதி. இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தெருவில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை திரும்பியிருக்கிறார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்துப் பதறிப்போய் வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், லேப்டாப் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, நீதிபதி சன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உமாசங்கரிடம் பேசினோம். “வீட்டில் யாரும் இல்லாததை கவனித்துத்தான் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறோம். குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்” என்றார்.