சென்னை: திமுக ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்ததாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் ஓராண்டு காலத்தில் செய்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து 5 புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, “முதல்வரின் அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு எதிர்க்கட்சி என்று பேசாமல் இருக்க முடியுமா? இன்று காலை மருத்துவர் ஐயாவிடம் பேசினேன். இன்று கேள்வி நேரம் இல்லை. ஓராண்டு நிறைவு இருக்கு, ஏதாவது பேச வேண்டியது இருக்கும் என்று சொன்னேன். “மணி, மனம் திறந்து பாராட்டுங்கள்” என்று தெரிவித்தார். முதல்வரின் கடந்த ஓராண்டுப் பணியை, ஆட்சி கடந்து வந்த பாதையை, மூத்த அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்து பாமக சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களின் பணி தொடரட்டும், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கட்டும்” என்று பேசினார்.