கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக இருக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.எம்.அண்ணாமலையின் மீதுதான் தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
“ `நான் பிரதமருக்கு வேண்டியவர்’ என்று சொல்லிக் கொண்டு விதிகளை மீறி பல்கலைக்கழக நிதியில் கோடிக்கணக்கில் ஆடம்பர செலவுகள் செய்கிறார். குறுநில மன்னர் போல வலம்வருகிறார். இந்த நிலை நீடித்தால் பாரம்பர்யமிக்க பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் தரமும் பாழாகிவிடும்” என வருந்துகிறார்கள், பல்கலைக்கழகத்தின்மீது அக்கறை கொண்டவர்கள்.
இந்த சர்ச்சை குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், பல்கலைக்கழகத்தின் முன்னாள் செக்சன் ஆஃபீஸர் குருநாதன். “வேந்தராக உள்ள கே.எம்.அண்ணாமலை காரைக்குடியை பூர்விகமாகக் கொண்டவர். இவர் அகமதாபாத் அப்போலோ மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக இருந்துள்ளார். அந்த சமயத்தில், பிரதமர் மோடிக்கு பிசியோதெரபி செய்ததன் மூலம் பிரதமருடன் நெருக்கம் ஆகிவிட்டார் எனக் கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக, பிரதமர் அலுவலக சிபாரிசு மூலமாக காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வேந்தராக கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர், வேந்தர் பதவிக்கு தகுதியுடைய கல்வியாளரும் இல்லை. அந்த வயதும் இவருக்கு இல்லை.
இவர் பொறுப்பேற்றதும், தன் நண்பர் சிவக்குமார் என்பவரை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமித்தார். அவருக்கும் பதிவாளர் ஆவதற்குத் தேவையான கல்வித் தகுதி உட்பட எந்தத் தகுதியும் இல்லை. துணை வேந்தர் நடராஜன், கட்டடம் கட்டுவது உள்ளிட்டப் பல பணிகளுக்கு டெண்டர் விடுவதில் பெரிய அளவில் கமிஷன் பார்த்திருக்கிறார். அதில் தனக்கும் பங்கு வேண்டும் என சிவக்குமார் கேட்டதால், இருவருக்கும் இடையில் பிரச்னை கிளம்பியது. சிவக்குமாரை காலி செய்ய நினைத்த நடராஜன், மத்திய தணிக்கை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் சிவக்குமார் விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, நடராஜன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து 4 பேர் (பொறுப்பு) துணைவேந்தர்களாக வந்தனர். ஆனால் அவர்களை வேந்தரும், பதிவாளரும் சேர்ந்து பணியைச் செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள். அதனால் அவர்கள் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டனர். தற்போது துணை வேந்தராக இருக்கும் ரங்கநாதனையும் செயல்பட விடாமல் இருவரும் தடுத்து வருகிறார்கள்.
அண்ணாமலை, வேந்தர் பதவியை வைத்துக் கொண்டு பல்கலைக்கழக நிதியில் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார். ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவது, உயர்ரக வாடகை கார்களில் வலம்வருவது என பல்கலைக்கழகப் பணத்தில் உல்லாசமாக இருக்கிறார். டெல்லியில் தேவையே இல்லாமல் வேந்தருக்கான அலுவலகத்தைத் திறந்துள்ளார். அந்த அலுவலகம் அண்ணாமலையின் நண்பர் கிருஷ்ணகுமார் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிருஷ்ணகுமாரும் பிரதமர் அலுவலகத்தில் பழக்கம் உள்ளதாகச் சொல்லித் திரிகிறார். கிருஷ்ணகுமாருக்கும் பல்கலைக்கழக நிதியில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4.12 கோடி ரூபாயை வீணாக்கியுள்ளார், அண்ணாமலை.
பல்கலைக்கழக கமிட்டியில் கல்வித்துறைக்கு தொடர்பில்லாத துறைகளைச் சேர்ந்த ராஜேஷ் உன்னி, நாகராஜ் உள்ளிட்டோரை கே.எம்.அண்ணாமலை சேர்த்தார். இவர்களெல்லாம் அண்ணாமலையின் நண்பர்கள். இவர்கள் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்வதேயில்லை. இந்த விதிமீறல்கள்குறித்து டெல்லியில் யாருக்கு புகார் அனுப்பினாலும் தன்னுடைய செல்வாக்கால் அவற்றை தவிடுபொடியாக்கி விடுகிறார், அண்ணாமலை. தற்போது பதிவாளர் சிவக்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தபிறகும் மீண்டும் அண்ணாமலையே வேந்தர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமரின் முதன்மை செயலாளர் அமித் கரே, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். ஏற்கெனவே பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டிகளை நியமித்தபோது, அதில் பல லட்சங்களை கமிஷனாகப் பெற்றார் அண்ணாமலை. தற்போது, பேராசிரியர் உட்பட காலியாக உள்ள 180 பணியிடங்களை, பணம் வாங்கிக்கொண்டு நிரப்ப அண்ணாமலை திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தி அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இதுவரை வேந்தராக இருந்தவர்கள் மூத்த கல்வியாளர்களாக இருந்துள்ளனர். ஆனால், அதற்கு கல்வி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகள் எதும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தியே கல்வித்துறையில் அனுபவம் இல்லாத கே.எம்.அண்ணாமலை வேந்தராக பொறுப்பேற்றுள்ளார். இதுவரை வேந்தராக இருந்தவர்களில் மிககுறைந்த வயதுடையவர் இவர்.
பல்கலை அனைத்து அதிகாரங்களும் பதிவாளர் கையில் இருப்பதால், அண்ணாமலை தன் நண்பர் சிவக்குமாரை பதிவாளராக கொண்டுவந்தார். பல்கலை பதிவாளர் பொறுப்புக்கு முதுகலை பட்டப்படிப்பில் சராசரி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சிவக்குமார் சராசரியை விடவும் குறைவாகவே பெற்றிருக்கிறார். இதேபோல பதிவாளர் ஆவதற்கு குறைந்தபட்சம் உதவிப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது இணைப்பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். சிவக்குமார் இத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவில்லை. அதேபோல உதவிப் பேராசிரியர், இணைப்பேராசிரியாக பணியாற்றிய போது கிரேடு பே 7 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் ரூபாய் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிவக்குமார் கன்சாலிடேட் அடிப்படையில் மட்டுமே ஊதியம் பெற்றிருக்கிறார். எனவே அவர் காந்தி கிராம பல்கலை பதிவாளராக தகுதியில்லாதவர். அண்ணாமலையின் ஏற்பாட்டில் தான் விதிகளை மீறி சிவக்குமார் பல்கலைக்குள் எளிதாக வந்துவிட்டார்” என்றார்.
வேந்தர் கே.எம்.அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டபோது, “நான் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அனைத்து பணிகளும் விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளன. ஒரு சிலர் உள்நோக்கத்தோடு தேவையின்றி பல்கலைக்கழக விவகாரங்களை வெளியே பேசி வருகின்றனர்” என்று முடித்துக் கொண்டார்.
சிவக்குமாரைத் தொடர்பு கொண்டு நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், அவர் பதிலளிக்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.