தமிழகத்தில் தற்போது 1.4 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை https://tndphpm.com என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வரை மக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
46 ஹெல்த் யூனிட்களை சேர்ந்த நபர்களின் பெயர்கள், தடுப்பூசியின் வகை, தடுப்பூசியின் தேதி மற்றும் இடம், பயனாளிகளின் அடையாளம் மட்டுமின்றி சிலரின் மொபைல் எண்களும் கவனக்குறைவாக கூகுள் ஷீட்டில் பதிவேற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நோய்த்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கோவின் போர்ட்டலில் இருந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து நபர்களின் வரிசை பட்டியலை உருவாக்குகிறோம். இதன் நோக்கமானது தடுப்பூசியை அலட்சிப்படுத்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பூசி முகாம்களை திட்டமிடுவதே ஆகும்.
அனைத்து சுகாதார பிரிவுகளை சேர்ந்தவர்களின் விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பட்டியலிப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தரவுகள் குறிப்பிட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மட்டுமே அணுகக்கூடியது. எனவே, எத்தனை நாள்கள் ஆன்லைன் போர்டலில் இருக்கும் என தெரியவில்லை என்றார். சிலர், இது தனியுரிமை மீறும் செயல் என கருத்து தெரிவித்தனர்.
இந்த விவரங்கள் அடங்கிய லிங்கை ட்விட்டரில் பதிவிட்ட பயனாளர் ஒருவர், ஒவ்வொரு ஆவணத்தில் இருக்கும் டேட்டாவை மாற்றியமைப்பதற்கான முழு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது, இந்த ஆவணம் கவனக்குறைவாக பொதுகளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. உடனடியாக நீக்கப்படும். மக்களை அவமானப்படுத்தவதோ அல்லது தனியுரிமையை மீறும் நோக்கமோ இல்லை என தெரிவித்தார்.