சண்டிகர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சித்த வழக்கில் தொடர்புள்ள பாஜ நிர்வாகியை டெல்லியில் பஞ்சாப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை தனது மாநிலத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில், அரியானா போலீஸ் உதவியுடன் டெல்லி போலீசார் ‘தட்டி தூக்கி’ சென்றது. ஆம் ஆத்மி, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு இடையே நடந்த இந்த அதிகார மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு டெல்லி அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பாஜ எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர். சில மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளித்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை கடுமையாக விமர்சித்தார். ‘இந்த படத்தை அனைவரும் இலவசமாக பார்க்க வேண்டும் என பாஜ விரும்பினால், யூடியூப்பில் போடுங்கள்,’ என அவர் தெரிவித்தார். டெல்லி பாஜ செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா, இதற்காக கடந்த மாதம் கெஜ்ரிவாலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகியான சன்னி அலுவாலியா என்பவர், பக்கா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், பக்கா மீது கடந்த மாதம் 1ம் தேதி பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பக்காவின் வீட்டுக்கு நேற்று காலை சென்ற பஞ்சாப் போலீசார், அதிரடியாக அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதை கண்டித்து டெல்லி பாஜ தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், தனது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாக டெல்லி போலீசில், பக்காவின்தந்தை புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜானக்புரி போலீசார், அரியானா போலீசை தொடர்பு கொண்டனர். பக்காவை பஞ்சாப் போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதாக கூறப்பட்டதை தொடர்ந்து, குருஷேத்ராவில் உள்ள பிபிளியில் அரியானா போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு விரைந்த டெல்லி போலீசார், பக்காவை பஞ்சாப் போலீசிடம் இருந்து மீட்டு டெல்லி அழைத்துச் சென்றனர். பஞ்சாப் போலீசாரை அரியானா போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அரியானாவில் பாஜ ஆட்சி நடக்கிறது. டெல்லியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை உள்ளது. ஒரு கைதுக்காக அரியானா, டெல்லி, பஞ்சாப் போலீசார் இடையே நடந்த இந்த அதிகார மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மாநில போலீசாரை அரியானா போலீசார் தடுத்த விவகாரம் பற்றி, உயர் நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு முறையிட்டுள்ளது.டர்பன் அணிய கூட அனுமதிக்கவில்லைதஜிந்தர் சிங் பக்காவின் தந்தை பிரீத் சிங் கூறுகையில், ‘‘நேற்று காலை 2 பஞ்சாப் போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு தேநீர் கொடுத்தோம். அவர்கள் சாதாரணமாக அமர்ந்து எனது மகனிடம் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 10-15 பஞ்சாப் போலீசார் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என் மகனை இழுத்துச் சென்றனர். டர்பன் அணிவதற்கு கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனை நான் வீடியோ எடுக்க முயற்சித்தபோது எனது போனை பறித்துக் கொண்டு, முகத்தில் குத்தி கீழே அமரும்படி மிரட்டினார்கள்,” என்றார்.