தாய் மொழியை கற்றுக் கொண்டு பிற மொழியையும் கற்க வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

நீலம்பூர்:
கோவை மாவட்டம் நீலம்பூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அனைவரும் தாய் மொழியை முதன்மையாகக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும். தாய் மொழி கற்றுக்கொள்வது தாய் பாலை பிறந்த குழந்தை முதலில் அருந்துவது போன்றது. தாய் மொழியை கற்றுக் கொண்டு பிற மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
10 கோடிக்கு மேல் இன்றைய வாலிபர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் போதை ஒழிப்பில் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் கோவை மாவட்டம் தூய்மையான நகரங்களில் ஒன்றாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசுகள் முழுமையாக செயல்பட்டுள்ளன. மத்திய அரசும் அதற்கான ஏற்பாட்டைச் செய்தது. இதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்கள் அதிகம் என தவறான தகவல்கள் உலக அமைப்புகளால் சொல்லப்பட்டு வருகிறது. இறப்பு விகிதங்களை சரிவர மத்திய அரசு கையாண்டு வருகிறது.
நோய் தொற்று பரவலை வெற்றிகரமாக இந்தியா எதிர்கொண்டுள்ளது. தமிழக அரசு ஓராண்டை நிறைவு செய்து உள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு பாடுபடவேண்டும்.
திராவிட மாடல் என சொல்வதற்கு பதிலாக தமிழில் திராவிட மாதிரி என சொன்னால் நன்றாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை மூலம் தாய் மொழியை கற்றுக் கொண்டு, பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.