இலங்கையில் மீண்டும் நெருக்கடி: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; அதிகரிக்கும் பொருளாதார சிக்கல்: உலுக்கும் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டீசலுக்குரிய பணத்தைச் செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1, 20,000 டன்கள் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் செய்தது.

இதுமட்டுமல்லாமல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

கைகொடுத்த இந்தியா

ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குவதில் சிக்கல் நீடித்துள்ளது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் நிரப்ப முடியும்.
மூன்று சக்கர வாகனங்கள் ரூ.1,500 வரையும், காா், ஜீப், வேன் ஆகியற்றுக்கு ரூ.5,000 வரையும் எரிபொருள் நிரப்பிக் கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பல மணிநேரம் காத்திருந்து வாகனங்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டிய சூழல் உள்ளது.


இதனால் இலங்கையில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சிக்கல்; தீவிரமாகும் போராட்டம்

இதனால் இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர் போராட்டக்காரர்கள் கடந்த 2 தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் இரண்டு லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அதனை பீச்சியடித்து மக்களை விரட்டியடித்தனர். மேலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். இதுமட்டுமின்றி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்த கொண்டுள்ளனர்.


இதனால் பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகள் கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டு சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. . போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.