கர்நாடக முன்னேற்றத்தில் அனந்தகுமார் பங்கு; முதல்வர் பசவராஜ் பொம்மை புகழாரம்| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடக மாநிலத்தின் நிலம், நீர், மொழி மற்றும் மக்களின் நலன் தொடர்பான பிரச்னைகளில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை புகழாரம் சூட்டினார்.பெங்களூரு ஜெயநகரிலுள்ள மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமார் அலுவலகத்தில், ‘அனந்த பிரேரணா கேந்திரா’வை கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று திறந்து வைத்தார்.

விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:பெங்களூரு மெட்ரோ, சர்வதேச விமான நிலையம், தென்மேற்கு ரயில்வே தலைமையகம் ஹூப்பள்ளிக்கு வருவதற்கும், கிருஷ்ணா மேலணை திட்டத்தை செயல்படுத்துவதற்கும், காவிரி நதிநீர் பிரச்னையில் மாநிலத்தின் நலன்களை தனது உறுதியான மற்றும் கடினமான நிலைப்பாட்டின் மூலம் பாதுகாப்பதற்கும் அனந்த குமார் முக்கிய பங்கு வகித்தார்.பெங்களூரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர், மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். கிருஷ்ணா மேலணை திட்டம் தொடர்பான, கிருஷ்ணா தீர்ப்பாய பிரச்னையில் வலுவான சட்டப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்.மாநிலத்தை கடுமையான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அனைவருக்கும் அவர் உத்வேகமாக இருந்தார். கர்நாடகா ஒருபோதும் அனந்த குமாரை மறக்க முடியாது.

அவர் தனது உன்னதமான படைப்புகளால் நம் வாழ்வில் உயிருடன் இருக்கிறார்.மாணவ பருவத்தில் இருந்தே ஏ.பி.வி.பி., தலைவராகவும், பின் பா.ஜ.,வின் தீவிர செயலராகவும், கட்சியின் உயரிய தலைவராகவும் வலம் வந்தவர். நாங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், வகுப்பு தோழர்களாகவும் இருந்தோம். கல்லுாரியில் வகுப்பிற்கு ஒருவர் தாமதமாக வரும்போது, ஒருவருக்கு ஒருவர் பெஞ்சில் இடம் ஒதுக்கிக் கொண்டோம்.மாணவர்களின் நடவடிக்கை குழுவை உருவாக்கி போராடினோம். அதன் செயலராக ஆக்கினோம். எமர்ஜென்சிக்கு எதிராக நுாற்றுக்கணக்கான மாணவர்களுடன் மாபெரும் போராட்டம் நடத்தினோம். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவரை கைது செய்தனர்.

இதனால் தனது வாழ்க்கையில் அவர் ஒரு கல்வியாண்டை இழக்க நேரிட்டது. அவரது தலைமை பண்புகளையும், நாட்டிற்கான நீண்ட கால பார்வையையும் அப்போதுதான் பார்த்தேன்.தீவிர அரசியல்வாதியான அவர், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். நெருக்கடி நிலையிலும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய அன்பின் கொக்கியில் இருந்து தப்ப முடியாமல் கடைசியில் பா.ஜ.,வில் சேர்ந்தேன்.’ஆதம்ய சேதனா’ அமைப்பு மூலம், அனந்த குமார் மனைவி தேஜஸ்வினி, ஆற்றி வரும் சமூக பணி பாராட்டிற்குரியது. அனந்தகுமார் நினைவிடம் கட்டுவதற்கு மாநில அரசு, முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.