நேபாளத்தில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் பலி

காத்மாண்டு:
நேபாளத்தில் உள்ள காஞ்சன் ஜங்கா மலை இந்திய எல்லையில் அமைந்துள்ளது. 8,200 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை உலகின் 3-வது உயரமான மலையாகும். இங்கு ஏராளமான மலையேறும் வீரர்கள் மலை ஏறி வருகிறார்கள்.
இந்த நிலையில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த நாராயணன் அய்யர் (52) என்பவர் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறினார்.
மலை உச்சியில் அருகே நாராயணன் அய்யர் சென்றபோது திடீரென்று இறந்தார்.
உடல்நல குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலையேறும் பயணத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குனர் நிவேஷ் கார்கி கூறும்போது, நாராயணன் அய்யருக்கு இரண்டு உதவியாளர்களை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் மற்றவர்களைவிட மெதுவாகவே ஏறினார். அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கீழே இறங்குமாறு கேட்டு கொண்டோம். ஆனால் அவர் மலையில் இருந்து கீழே இறங்க மறுத்துவிட்டார். இதனால் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றார்.
அவரது உடலை கீழே கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது.
மலை ஏறிய 4 இந்தியர்கள் உள்பட 6 பேர் உச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து முகாமுக்கு கீழே வருகிறார்கள். இந்த ஆண்டு நேபாளத்தில் 3-வது மலையேறும் வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சீசனில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறி வெளிநாட்டினர் 68 பேருக்கு நேபாளம் அனுமதி கொடுத்தது. இதில் பலர் மலை உச்சியை சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.