கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக அரசு அமோக வெற்றி பெற்றதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தாழ்ந்து கிடந்த “ஜார்ஜ் கோட்டையை” தலை நிமிர செய்துள்ளார். இந்த ஒரு வரலாற்று வெற்றியை தொடர்ந்து திமுக அரசானது கடந்த ஓராண்டாக மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
1949 இல் சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தை அதிக முறை அலங்கரித்த அரசியல் இயக்கங்களில் ஒன்று தான் திமுக. தன் நீண்ட நெடிய வரலாற்றில் அறிஞர் அண்ணா தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் தொட்டு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரை பல அரசியல் வெற்றி, தோல்விகளை சந்தித்து கூட , பெருமிதமும் கொள்ளாமல், துவண்டும் விடாமல் அரசியல் பாதையில் தனக்கான அரசியல் தத்துவத்தோடும், தனித்தன்மையோடும் கடந்து வரும் ஒரு இயக்கம் திமுக.
அந்த திமுகவின் வழிவந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள், 1976 இல் மிக இளம் வயதில் அவசர நிலை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்டு சிறை படுத்தப் பட்டு சிறை சித்ரவதையை சந்தித்தார்.
அதன்பின் ,1984 இல் திமுக இளைஞரணி செயலாளர், 1996 இல் சென்னை மாநகர மேயர், அதன் பின் திமுகவின் செயல் தலைவர், 2018 இல் திமுக தலைவர் மற்றும் 2021 இல் தமிழ்நாடு முதலமைச்சர் என்று தன் அரசியல் பாதையில் பல நிலைகளை எதிர்ப்புகளோடும், சவால்களோடும் கடந்து வந்துள்ளார். 2018 இல் தான் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் , 2019 இல் நடந்த பாராளுமன்ற தேர்தல், அதன் பின் 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2022 உள்ளாட்சி தேர்தல் வரை பெருவாரியான இடங்களை கைப்பற்றி தனது தலைமையின் கீழ் திமுகவின் அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வருவதன் மூலம் அவர் தன் அரசியல் ஆளுமையை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் நிரூபித்துள்ளார்.
இந்த வெற்றிகளின் தொடர்ச்சியாக , கடந்த ஓராண்டு கால “திராவிட மாடல்” ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் ஏராளம்.
குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், இதன் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள பல பெண்கள் பயனடைகிறார்கள். பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைத்தது, பல லட்சம் குடும்பங்களின் நகை கடன்களை தள்ளுபடி செய்தது போன்றவைகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியது போல உள்ளது.
மிக முக்கியமாக , தமிழ்நாடு முழுவதும் கடந்த பருவமழையின் போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வரே நேரில் சென்று பார்வையிட்டு எடுத்த துரித நடவடிக்கைகள் மக்களை வெகு விரைவாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவியாக இருந்தது. இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெறாத பயனை இந்த ஒரு ஆண்டில் பெற்றுள்ளது.
மேலும் , கடந்த ஒரு வருடமாக, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்கள் நல்வாழ்வுக்கான பணிகளை ஒருபுறம் செய்து கொண்டிருந்தாலும், சமூக மாற்றத்திற்கான பணியையும் சளைக்காமல் செய்து வருகிறார். எங்கோ ஒரு மூலையில் விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்படும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் சுயமரியாதையை காக்கும் காவலனாக இருக்கிறார் .
குறிப்பாக அஸ்வினி என்ற நரிக்குறவர் இன பெண்ணுக்கு அன்னதானத்தில் உணவு மறுக்கப்பட்ட போது, அதை அறிந்த முதல்வர் அவர்கள், இந்து அறநிலைய துறை அமைச்சர் திரு. சேகர் பாபுவை அங்கு அனுப்பி , எங்கே அந்த பெண்ணுக்கு உணவு மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் அமைச்சரோடு உணவருந்த செய்தார்.
அதோடு மட்டும் நிற்காமல், முதலமைச்சரே அந்த பெண்ணின் வீட்டிற்கு நேராக சென்று சந்தித்தது என்பது அந்த பெண்ணின் மறுக்கப்பட்ட சுயமரியாதைக்கு முதல்வர் கொடுத்த மரியாதை. அது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதம் , சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டிருந்த சேலத்தை சேர்ந்த மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார். இதன் மூலம் தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே சமூகத்தின் அனைத்து நிலை மக்களும் எளிதில் அணுகும் முதல்வராக திகழ்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாக எடுத்துக் கொண்டோமானால், மருத்துவக் கல்வியில் சேர நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வின் தீமைகள் பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்தார், அதன் தொடர்ச்சியாக கடந்த 13 செப்டம்பர் 2021, நீட் நிரந்தர விலக்கிற்கான தீர்மானம் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி , அது தற்போது ஆளுநரால் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கல்வியில் மாநிலங்களின் உரிமையை காப்பாற்றி மாநில சுயாட்சியையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் மூலம் சுயமரியாதையையும் , அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தின் மூலம் தமிழுக்கு மகுடம் சேர்த்தும் , மருத்துவ படிப்பில் சட்டப் போராட்டத்தின் மூலமாக 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கான ஒரு விடியலை ஏற்படுத்தி சமூக நீதியையும் நிலைநிறுத்தியது மூலம் தான் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே திமுகவின் நான்கு அரசியல் தத்துவங்களான மாநில சுயாட்சி,சமூக நீதி, சுயமரியாதை மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை தழுவியே தன் ஆட்சி இருக்கும் என்பதையும் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஒட்டு மொத்தமாக சொல்லவேண்டுமானால், மக்கள் பணி, சமூக முன்னேற்றம் என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வழங்கி வருவதன் மூலம் , கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெறாத வளர்ச்சியை ஒரு ஆண்டிலேயே பெற்று தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தலைநிமிர வைத்ததன் மூலம் மக்கள் போற்றும் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற ஒரு தலைவராக உருவெடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.