கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்றார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த பாஜக இளைஞர் பிரிவு தொண்டர் அர்ஜூன் சவுராசியா என்பவர் நேற்று காலை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது வீட்டுக்கு சென்று அமித் ஷா ஆறுதல் கூறினார். பின்னர், அமித் ஷா கூறியதாவது:
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்று வியாழக்கிழமை ஒரு ஆண்டு நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) அரசியல் கொலைகள் ஆரம்ப மாகிவிட்டன. பாஜகவைச் சேர்ந்த இளைஞர் அர்ஜூன் சவுராசியா கொலை செய்ய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் சவுராசியாவின் வயதான பாட்டியையும் தாக்கியுள்ளனர். கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறோம்.
பாஜகவினர் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். சவுராசியா கொலைக்கு பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.