மேற்கு வங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி 2020 நவம்பர் மாதம், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் லாலா என்ற உள்ளூர் நிலக்கரி இயக்குநரான அனுப் மஜ்ஹி முக்கிய குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுகிறார். இந்த குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் அவௌ அனைத்தையும் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குனரகம் ஒரு புகார் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அபிஷேக் பானர்ஜியுடைய மனைவி ருஜிரா பானர்ஜி ஒத்துழைக்கவில்லை” எனப் புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் நிதேஷ் ராணா,”பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டும் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திலோ அல்லது விசாரணை நிறுவனத்திலோ ஆஜராகவில்லை” என வாதாடினார். இதைத் தொடர்ந்து, பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் இன்று அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு எதிராக ஜாமீன் பெறக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.