ஐதராபாத்: தற்போது, நாட்டில் சுமார் 10 கோடி பேர் பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று ஐதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த் கூறினார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், தகவல் பணியகம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, புலனாய்வு பிரிவு மற்றும் தெலங்கானா போலீசார் சார்பில் ஐதராபாத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ஐதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த் கூறுகையில், ‘கடந்த இரண்டு நாட்களில், சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ₹125 கோடி மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். 70%க்கும் அதிகமான போதைப்பொருட்கள் சர்வதேச கடல் வழிகள் வழியாகவும், 20% சாலை வழியாகவும், 10% விமானம் மூலமாகவும் நாட்டிற்கு கடத்தப்படுகின்றன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் டோனியின் கும்பலுக்கு, ஹெராயின் மற்றும் கஞ்சா வியாபாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கோகோயின் பயன்படுத்தக்கூடிய நான்கு அல்லது ஐந்து வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுள்ளோம். நாட்டில் பல்வேறு போதைப் பொருள்களின் நுகர்வு விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் 70% அதிகரித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது, நாட்டில் சுமார் 10 கோடி பேர் பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது’ என்றார்.