புதுடெல்லி:
2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவ மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டதாக கூறி ஒரு அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் அடிப்படையில் செய்திகள் வெளியிடப்பட்டன.
ஆனால், இந்த நோட்டீசின் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) ஆய்வு செய்ததில், அது போலியானது என தெரியவந்தது. இத்தகவலை பத்திரிகை தகவல் மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை என்றும், மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் கூறி உள்ளது.
தவறான மற்றும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் வாரியம் கூறி உள்ளது.
அறிவிப்புகளை தனது இணையதளத்தில் மட்டுமே (https://natboard.edu.in) வெளியிடுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் கூறி உள்ளது. தேர்வுகள் வாரியம் தொடர்பான தற்போதைய மற்றும் உண்மையான தகவல்களுக்கு இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவ மாணவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 15000 மாணவர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.