இலங்கையின் தேசிய கீதத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. 1951-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட முதல் அமைச்சரவையால் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கீதத்தை, புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிக் கொடுக்க, அவரது சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள இசைக் கலைஞரான ஆனந்த சமரகோன் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். 1952-ல் அந்தப் பாடல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிஞரும் பண்டிதருமான புலவர் மு.நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் தமிழில் பாடப்பட்டுவந்த அந்தத் தேசிய கீதத்துக்கு 1956-ல், பண்டாரநாயக்க ஆட்சியில் எதிர்ப்புக் கிளம்பியது.
நாட்டில் அரசுக்கு எதிரான அரசியல் ஊர்வலங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஆகியவை தோன்றும்போதெல்லாம் அவை அனைத்துக்கும் காரணம், ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும் அந்தப் பாடல்தான் எனும் நியாயமற்ற கருத்தொன்று தலை தூக்கியிருந்தது. தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பிறகு 1961, பிப்ரவரி மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதமானது, ‘ஸ்ரீலங்கா மாதா’ என வரிகள் மாற்றப்பட்டே பாடப்பட்டது.
2015-ல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சவிடமிருந்தும் தனது கட்சியிலிருந்தும் இனவாதிகளிடமிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய கீதத்தைத் தமிழில் பாட அனுமதி வழங்கினார். தொடர்ந்து, 2019-ல் ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மீண்டும் தேசிய கீதத்தை இலங்கையின் இரண்டாவது தேசிய மொழியான தமிழில் பாடுவதை முழுமையாகத் தடைசெய்தார்.
தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமது தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தடுப்பது என்பது, அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து, அவர்கள்மீது பிரயோகிக்கும் அடையாளத் தாக்குதலாகும். இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையில்லை என்று பலவந்தமாக, நாட்டை விட்டுப் போகச் சொல்லும் தூண்டுதலாகும்.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் முடிவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுப் புதியதொரு ஆட்சி அமைக்கப்படும்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கான உறுதியானதும் நிரந்தரமானதுமான தீர்மானம் எட்டப்பட வேண்டும். அனைவரும் போராடிப் பெறும் அந்த வெற்றியில், தமிழ் பேசும் மக்களின் மிகப் பெறுமதியான உரிமைகளில் ஒன்றான இந்தத் தீர்வானது, காலாகாலத்துக்கும் எவராலும் மாற்றப்பட முடியாத ஒன்றாக எப்போதும் இருத்தல் வேண்டும்.
> இது, எம்.ரிஷான் ஷெரீப் எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்