“தொகை சின்னது… ஆனா, மதிப்பு பெருசு” – முதல்வர் நிவாரண நிதிக்கு முதல் மாத சம்பளத்தை வழங்கும் சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெண்

சென்னையை பூர்விகமாகக் கொண்ட ஷாலினி மணிவண்ணன் தற்போது சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது முதல் மாத சம்பளத்தை (இரண்டாயிரத்தி ஐநூறு சிங்கப்பூர் டாலர் – இந்திய மதிப்பில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்) இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை தனக்கு அடிப்படைக் கல்வி கொடுத்த தமிழக நலனுக்காகவும், இன்னொரு பகுதியை தனக்கு சிறப்புக் கல்வி கொடுத்த சிங்கப்பூரின் நலனுக்காகவும் வழங்க இருக்கிறார். தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டு, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தன் முதல் மாத சம்பளத்தில் சரிபாதியை வழங்க இருக்கிறார். இதற்காக சென்னைக்கு வந்திருக்கும் ஷாலினியிடம் ஒரு மினி பேட்டி..

பிறந்த ஊர், அம்மா அப்பா பற்றி… – “அப்பா பிறந்தது சென்னை. அம்மா பிறந்தது மும்பை. அம்மாவோட குடும்பம் மும்பையில் இருந்ததால நான் பிறந்ததும் மும்பைலதான்..”

எப்படி சிங்கப்பூரில் வாய்ப்பு கிடைத்தது… – “இன்டீரியர் டிசைனிங்கில் என் கேரியரை அமைச்சுக்க முடிவு பண்ணேன். சரியான இன்ஸ்ட்டியூட் எங்கே இருக்குன்னு தேடினப்ப, சிங்கப்பூர்ல இருக்கும் ‘Raffles Design Institute’ பத்தி தெரியவந்தது. அப்ளை பண்ணேன். அட்மிஷன் கிடைச்சிடுச்சு. இந்த துறையில் உலக அளவில் இருக்கும் மிகச்சிறந்த இன்ஸ்ட்டிடியூட்களில் இது முக்கியமான ஒன்று.”

முதல் மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க எப்போது முடிவு செய்தீர்கள்… எது உங்களை ஊக்கப்படுத்தியது..? – “இந்த எண்ணம் எனக்கு வரக் காரணம் என் அப்பா மணிவண்ணன்தான். சமூகத்துக்கு நிறைய உதவிகள் செஞ்சிட்டே இருப்பவர் என் அப்பா. தன் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழ் வளர்ச்சிக்காகவும், இன்னொரு பகுதியை இல்லாதோருக்கும் வழங்கியவர். இதனை அவர் தொடர்ந்து செய்து வந்தார். சின்ன வயதில் இருந்தே அவரது இந்த உதவும் பழக்கத்தை அருகே இருந்து பார்த்து வளர்ந்ததால், எனக்கும் இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன்.

நிவாரண நிதியை எவ்வாறு தரபோகிறீர்கள்..? முதல்வரை நேரில் சந்திக்கும் திட்டம் உள்ளதா? – “என்னை பொறுத்தவரை, அளவில் பார்த்தால் இது சிறிய தொகைதான். ஆனால் இது மதிப்பில் பெரிசுன்னு என் அப்பா சொன்னார். நான் அப்பாகிட்ட என் ஆசையை சொன்னதும் அவர் எனக்கு சொன்னது… ஒரு சின்னக்குழந்தை தன்னோட உண்டியலை உடைச்சு அதில் சேர்த்து வைக்கும் பணத்தை மத்தவங்களுக்கு உதவி செய்ய கொடுக்குறது மாதிரி, இது மதிப்பில் பெரியதுன்னு அவர் சொன்னார்.

நானும் சின்ன வயசு முதலாகவே என் உண்டியல்ல சேர்க்கும் பணத்தை எடுத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்க கொடுத்துடுவேன். என்னோட ஒவ்வொரு பர்த் டே அன்னிக்கும் அப்படிச் செய்வேன். இந்தத் தொகையை முதல்வர் அவர்களைச் சந்தித்து கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். என்னைப் பார்த்து ஒரு நாலஞ்சு பேராவது இப்படி தாய் நாட்டுக்கு தன் வருமானத்தில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.”

ஷாலினியின் கனவு..: – ” நாளை மே 8ம் தேதி எனக்கு பிறந்த நாள். தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அவரது ஆசி பெறவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக நான் அளிக்கும் தொகையை அவரிடம் கொடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தால்.. அது நான் என்றென்றும் நினைவுகூர்ந்து மகிழும் நனவான கனவாக இருக்கும்.

நான் நானாகவே இருக்கணும். என் கேரியர்ல நல்ல இடத்துக்கு போகணும். நிறைய சம்பாதிக்கணும். எனக்கு மட்டும்னு எடுத்துக்காம, அப்பா மாதிரியே எல்லோருக்கும் கொடுத்து சந்தோஷமா வாழணும். சமுகத்தும் நாம ஏதோ ஒரு விதத்துல ஹெல்ப் பண்ணிக்கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்.”

தொடர்புக்கு: [email protected]

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.