வாங்காத கடனைக் கேட்டு, ஆபாசப் படங்களை அனுப்பி மிரட்டல் – விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

மும்பை மலாடு குரார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கோரேகாவ்கர்(38). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சந்தீப், ஆன்லைனில் கடன் கொடுக்கும் மொபைல் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்திருந்தார். ஆனால், கடன் வாங்கவில்லை. அப்படியிருந்தும் அவர் கடன் வாங்கி இருப்பதாகக் கூறி, கடனை திரும்பச் செலுத்தும்படி கேட்டு கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தனர். தான் கடன் வாங்கவே இல்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால், கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் அதனைக் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் சந்தீப் தனது சிம்கார்டைக்கூட மாற்றிப்பார்த்தார். ஆனாலும் பிரச்னை முடியவில்லை.

சந்தீப்பின் மொபைல் போனிலிருந்த தகவல்களை திருடி அதில் இருந்த தொடர்பு எண்களுக்கு கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள், சந்தீப்பின் ஆபாச படங்களை அனுப்ப ஆரம்பித்தனர். அதாவது சந்தீப் படத்தை மார்பிங் செய்து ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று சித்தரித்து, அதை சந்தீப் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த செய்தியை சந்தீப் நண்பர்கள் சந்தீப்புக்கு திரும்ப அனுப்பினர். இது குறித்து சந்தீப் போலீஸில் புகார் செய்தார்.

மன உலைச்சல்

ஆனால் போலீஸார் வெறுமனே புகாரை மட்டும் வாங்கிக்கொண்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டனர். இதனால் மர்ம ஆசாமிகளின் போன் தொல்லை மேலும் அதிகரித்தது. அவர்கள் சந்தீப் நண்பர்களுக்கு சந்தீப் போன்று செய்திகளை அனுப்பினர். அதில், “நான் கடன் வாங்கியிருந்தேன். ஆனால் கடனுக்கான மாதாந்திர தவணை 5 ஆயிரத்தை செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்து உதவினால், எனது மனைவியை ஒரு நாள் இரவு அனுப்புகிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல்களை பார்த்து சந்தீப் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானார். இதனால் இந்த தொல்லையிலிருந்து விடுபட வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை!

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வருகின்றனர். கடன் ஏஜெண்டுகள் போன் செய்த நம்பர்களை வாங்கி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்து சந்தீப் சகோதரர் தத்தா குரு கூறுகையில், “போலீஸார் சந்தீப் போனை வாங்கிச்சென்றுள்ளனர். எங்களது குடும்பத்தையே அழித்த நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும்.

கடன் குறித்து என் சகோதரன் விசாரிக்க மட்டுமே செய்தார். வட்டி அதிகமாக இருந்ததால் அவன் கடன் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனால் கடன் ஏஜெண்டுகள் அவனுக்கு போன்செய்து கடனை திரும்ப செலுத்தும்படி சித்ரவதை செய்தனர். போலீஸாரும் அவன் புகார் மேஈது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது அவன் தற்கொலை செய்துகொண்டான்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.