பருவகால மாற்றம் எதிரொலி; 2022ம் ஆண்டின் தொடக்கம் 5வது அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக பதிவு

நியூயார்க்,
நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த ஓராண்டின் புள்ளிவிவரங்கள்,  பூமி கணிக்கமுடியாத அளவில் வெப்பமடைந்து வருவதை காட்டுகிறது.   புவி வெப்பமயமாதல் என்ற செயல், கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், தற்போது மிக மோசமான அளவில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

2021ம் ஆண்டு மார்ச் முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், செயற்கைக்கோள் தரவுகளின்படி, நாசா கண்டுபிடித்திருப்பது என்னவென்றால், பூமியின் ஒட்டுமொத்த அமைப்பிலும், கூடுதலாக பல ஆற்றல்கள் சூழ்ந்து கொண்டிருப்பது காண முடிகிறது.
கடல் வெப்பமயமாதல், நிலம் அதிக வெப்பம் உருவாக்குதல், சுற்றுச்சூழல் வெப்பமடைவது, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமி, கணிக்க முடியாத வேகத்தில் அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 1.64 வாட் (டபிள்யு/எம்2) என்ற அளவில் வெப்பமடைந்து வருகிறது.
அது என்னவெனில், லட்சக்கணக்கான ஹிரோஷிமா அளவுள்ள அணு குண்டுகள் ஒவ்வொரு நாளும் வெடித்தால் எந்த அளவுக்கு வெப்பம் வெளியாகுமோ அந்த அளவுக்கு இணையாக பூமி வெப்பமடைந்து வருகிறது.  
பல்வேறு காரணங்களால், பூமியின் ஆற்றல் சமநிலையை இழந்து, அதன் காரணமாக வெப்பமயமாதல் நிகழ்கிறது.  பூமியின் ஆற்றல் சமநிலையில் இல்லாதது, பூமியின் அமைப்பின் மீது கூடுதல் ஆற்றல்கள் ஏற்பட்டிருப்பதை தெளிவாக விளக்குகிறது.
இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான நிலக்கரிகளை எரிப்பதுதான். நிலக்கரி உள்ளிட்டவற்றை எரிப்பது, எண்ணெய் வடிவ எரிபொருள்களை அதிகளவில் எரிப்பது போன்றவையும் இதற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
உலகளவிலான புவி மேற்பரப்பு வெப்பநிலையை பற்றி நாசா, என்.ஓ.ஏ.ஏ., ஹேட்லி வானிலை ஆய்வு மையம்/யூ.இ.ஏ. மற்றும் பெர்க்ளி எர்த் உள்ளிட்ட வெவ்வேறு சர்வதேச குழுக்கள் ஆவண பதிவு செய்து வருகின்றன.
புவி மேற்பரப்பின் வெப்ப பதிவு ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சாதனை பதிவாக இருப்பதில்லை.  ஆனால், நடப்பு 2022ம் ஆண்டின் வருடாந்திர வெப்பநிலையானது, உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளாக சந்தித்து வரும் நீண்டகால வெப்ப சூழல் நிறைந்த வரிசையில் நிற்கிறது.
நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்கள், இதுவரையிலான ஆவண பதிவின்படி ஓராண்டில் வெப்பமுடன் தொடங்கும் 5வது ஆண்டாகும்.  இதுபோன்ற ஆவண பதிவுகள் 1850ம் ஆண்டின் மத்தியில் இருந்து கணக்கிடப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் ஆசியா, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.  முதல் காலாண்டில், இரு துருவ பகுதிகளிலும் வெப்ப அலைகள் சாதனை பதிவை கொண்டிருந்தன.
சீனா மற்றும் இந்தியா உள்பட தெற்காசியாவின் பகுதிகள் 2022 மார்ச்சில் அதிக வெப்ப பதிவினை கொண்டிருந்தது.  ஆய்வின்படி, புவியின் 4.2% மேற்பரப்பு மார்ச்சில் அதிக வெப்பத்துடன் இருந்தது.
1951-80 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த வெப்பநிலையை விட 79% அதிகம் இருந்தது.  மார்ச்சில் பூமியின் எந்த பகுதியிலும் குளிர், சாதனை அளவாக பதிவாகவில்லை.
2022ன் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க பருவகால நிகழ்வாக, மார்ச்சில் கிழக்கு அண்டார்டிகாவில் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்பநிலை காணப்பட்டது.  இது, இயல்பான வெப்பநிலையை விட அதிக அளவிலானது என உலகளவில் சாதனை பதிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
கோடையுடன் ஒப்பிடும்போது கடல் நீரானது குளிர்காலத்தில், அதிக அளவில் உறைதல் நிலைக்கு செல்லும்.  ஆனால், 2022ம் ஆண்டின் பிப்ரவரி இறுதியில் அண்டார்டிகா கடல் பகுதியில் நீர் உறைந்து பனிக்கட்டியாக மிதக்கும் செயல்முறை மிக குறைந்து காணப்பட்டது.  
ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பநிலையால் கடல்நீர் உறைதல் சரிவை கண்டு வருகிறது என தெளிவாக தெரிந்தது.  ஆனால், அண்டார்டிகாவில் பருவகால மாற்றத்திற்கான தாக்கம் பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவரவில்லை.
எல் நினோ மற்றும் லா நினோ ஆகிய நிகழ்வுகள் கூட்டாக ஈ.என்.எஸ்.ஓ. என அழைக்கப்படுகிறது.  இந்த நிகழ்வுகளால் நீண்டகால புவி மேற்பரப்பு வெப்பமடைதல் நிலை, ஆண்டுதோறும் மாறுபாடு அடைகிறது.  பசிபிக் கடலோர பகுதியின் வளிமண்டலம் மற்றும் சமுத்திரங்களுக்கு இடையேயான வெப்பநிலை மாறுபாட்டினால் இவை ஏற்படுகின்றன.
2022ம் ஆண்டு தொடக்கத்தில் காணப்பட்ட லா நினா சூழ்நிலையானது ஆண்டின் மீதமுள்ள காலங்களிலும் (குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்கு) தொடர கூடும்.  எனினும், ஆண்டு இறுதியில் லா நினா பலவீனமடைந்து ஈ.என்.எஸ்.ஓ. சமநிலைக்கு வர கூடும் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பருவகால மாற்றங்களால் ஏற்பட கூடிய தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான காரணிகளை அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் வளர்ந்த மற்றும் வளர்ச்சி அடைந்த உலக நாடுகளுக்கு உள்ளது.  இந்த ஆவண பதிவின்படி, 2022ம் ஆண்டானது இதுவரையிலான கணக்கெடுப்பின்படி, அதிக வெப்பம் மிகுந்த 4வது மற்றும் 8வது ஆண்டுக்கு இடைப்பட்ட நிலையில் நிற்க கூடும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.