காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வெளியே வரும்போது கட்டாயம் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு வரவேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை பரப்புதல், தீமையைத் தடுத்தல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் வீட்டை விட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா கூறியிருக்கிறார்.
மத நம்பிக்கை காரணமாக, பல ஆப்கன் பெண்கள் தலையில் முக்காடு அணிந்து முகத்தை மறைத்திருந்தாலும், காபூல் போன்ற நகரங்களில் பெண்கள் முகத்தை மறைப்பதில்லை.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், கரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே தலிபான்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை மூடச் சொல்லி உத்தவிட்டனர். இது சர்வதேச சமூகத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. தலிபான்களின் இந்த நடவடிக்கையால், ஆப்கனில் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக நடத்த இருந்த கூட்டத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதேபோல, அமெரிக்கா மற்றும் பிறநாடுகள் வங்கித்துறைகளில் ஆப்கானிஸ்தானிற்கு அளித்து வந்த ஆதரவினை நிறுத்திக் கொண்டன.
தங்களின் கடந்த ஆட்சியின்போது இருந்ததை விட பெண் கல்விக்கான தடை, பெண்களின் மீதான கட்டுப்பாடுகள் தற்போது மாறியிருப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ள போதிலும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண் பெண் இருவரும் ஒரே நேரத்தில் பூங்காக்களுக்கு வரத் தடை என பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் கட்டுப்பாடுகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் தலிபான்கள் அரசின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது.