
‛டான்' டிரைலர் அரசியல் வசனம் – சிவகார்த்திகேயன் பதில்
டாக்டர் படத்தை அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ். ஜே. சூர்யா உட்பட பலர் நடித்திருக்கும் படம் டான். கல்லூரி கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவன், கல்லூரி டான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். கல்லூரி முதல்வராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமான கல்லூரி கலாட்டாக்கள் நிறைந்த காட்சிகளாக இடம் பெற்றுள்ள இந்த டிரைலரில், வாழ்க்கையில் என்னவாக ஆகலாம் என்று ஒவ்வொன்றாக நண்பர்களிடத்தில் கேட்கிறார். இறுதியில் பேசாம நாம அரசியலுக்கு போயிடலாமா என்று கேட்க, அதற்கு நண்பரோ அரசியல்வாதி ஆனால் பொய்யெல்லாம் பேசணும்பா என்கிறார். அதற்கு சிவகார்த்திகேயனோ, அப்போ வேணாம் வேணாம் என்று பதறிக் கொண்டு சொல்வது போல் அந்த டிரைலர் முடிகிறது.
இப்படி அரசியலுக்கு சென்றால் பொய்யாக பேசவேண்டும் என்பதுபோல் இடம் பெற்றுள்ள இந்த டயலாக் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பட விழாவில் நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதியும் பங்கேற்றார். இது சிவகார்த்திகேயனை சற்றே தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
இதுபற்றி சிவகார்த்திகேயன் பேசுகையில், ‛‛டான் படம் அனைவருக்கும் பிடிக்கும். ரொம்ப ஜாலியான படம் என்றார். மேலும் டிரைலரின் முடிவில் வரும் அரசியல் வசனம் நானே எதிர்பார்க்காதது. சிபி அதை தவிர்த்திருக்கலாம். அந்த வசனம் காமெடிக்காக வைத்தது, மற்றபடி ஒன்றுமில்லை என்றார்.