செய்திகள் சில வரிகளில்…பெங்களூரு| Dinamalar

தந்தை மெழுகு சிலை முன் இன்று திருமணம்
மைசூரு: சிக்கமகளூரு கடூரின், அஜ்ஜம்புரா கிராமத்தை சேர்ந்த ரமேஷின் மகன் யதீஷ், ௨௭, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., ஆயுர்வேத கல்லுாரியில் எம்.டி., படித்து வருகிறார். கொரோனா தொற்று ஏற்பட்ட ரமேஷ், முந்தைய ஆண்டு உயிரிழந்தார். தந்தையின் மெழுகு உருவச்சிலையை யதீஷ் அமைத்திருந்தார். நஞ்சன்கூடு கணபதி திருமண மண்டபத்தில், யதீஷுக்கும், அபூர்வாவுக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ளது. இந்த திருமணம், தந்தையின் மெழுகு உருவச்சிலை முன் நடக்கிறது. சாஸ்திர, சடங்குகள் நேற்று துவங்கியது. தந்தை சிலை முன், தாயை அமர்த்தி, யதீஷ் சடங்குகள் செய்கிறார்.
யாரும் வராதீர்
பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தன் பிறந்த நாள் குறித்து தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த மாதம் 12 முதல் 18 வரை ராஜஸ்தானின் உததயபுராவில் நடக்கும் காங்கிரஸ் சிந்தனை முகாமில் பங்கேற்பதற்காக செல்ல உள்ளேன். இதனால் என் பிறந்த நாளான மே 15 அன்று என்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாது. அன்று வாழ்த்து தெரிவிப்பதற்காக யாரும் வர வீட்டுக்கு வர வேண்டாம். பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். பிளக்ஸ், பேனர் வைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்
.முதல்வருக்கு புதுப்பெயர்
பெங்களூரு: பெங்களூரில் வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறுகையில், “கர்நாடகாவில் இனிமேல் பா.ஜ.,வின் காலம் ஆரம்பாகி விட்டது. ‘டபுள் இன்ஜின் அரசு’ தான் வேண்டும் என கேட்கின்றனர். ”எல்லா முதல்வருக்கும் ஒரு பெயர் கொடுக்கப்படும். அந்த வகையில் பசவராஜ் பொம்மை ‘காமன் சி.எம்.,’ என அழைக்கப்படுகிறார். அவர் பொதுவான பட்ஜெட் தாக்கல் செய்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்,” என்றார்.
விருதாளர் உடல் நலம் பாதிப்பு
தட்சிண கன்னடா: உத்தர கன்னடா அங்கோலாவை சேர்ந்தவர் சக்ரி பொம்மே கவுடா, 65. நாட்டுப்புற கலைஞரான இவர், மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், நேற்றிரவு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் கலெக்டர் ஆய்வு
ஹாசன்: ஹாசன் சிறையில் கலெக்டர் கிரிஷ் ஆய்வு செய்தார். சிறையில் கைதிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர் கூறுகையில், “புதிய சிறை கட்ட 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 13 ஏக்கர் நிலம் ஆயுதப்படை பயன்படுத்தி வருகிறது. எனவே அவர்களிடமிருந்து பெற்று சிறைத்துறைக்கு ஒப்படைக்கும் பணிகள் நடக்கிறது,” என்றார்.
திருமண விருந்தில் வாந்தி பேதி
ஷிவமொகா: ஷிவமொகா அருகே உள்ள கஜ்ஜேனஹள்ளி கிராமத்தில் சிவா நாயக் என்பவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில் விருந்து சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சியினருக்கு வேலை இல்லை
மாண்டியா: மாண்டியாவில் பட்டு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயணகவுடா கூறுகையில், ”கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சே இல்லை. இதை எதிர்க்கட்சியினர் மட்டுமே பேசி வருகின்றனர். எங்களுக்கு 24 மணி நேரமும் செய்ய வேலை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு விமர்சனம் செய்வதை தவிர வேறு வேலையே இல்லை. மாண்டியாவில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறுவோம்,” என்றார்.
ஸ்ரீராம சேனை வேதனை
குடகு: குடகின் மடிகேரியில் ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், “பா.ஜ., அரசு ஹிந்துக்களுக்கு தைரியத்தை குறைக்கும் செயல்களை செய்து வருகிறது. காங்கிரசை போலவே பா.ஜ..வும் என்ன கட்டுப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறது,” என்றார்.
வரும் 25ல் கூட்டு திருமணம்
மைசூரு: மைசூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் வரும் 25ல் நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் கூட்டு திருமணம் நடக்கிறது. வரும் 13க்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.இதில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு 55 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என கலெக்டர் மஞ்சுநாத சாமி கூறினார்.
இரும்பு தாது பறிமுதல்
தாவணகரே: தாவணகரேயின் ஜகலுார் அருகே உள்ள ஜம்மாபுரா மலையில் இரண்டு மாதமாக இரும்பு தாது வெட்டி எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தாதுக்கள் அனைத்தும் மலை அடிவாரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அதிகாரிகள், 15 லாரி லோடு அளவு இரும்பு தாதுக்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.