பட்டின பிரவேச நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேட்டி

சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். 
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 
இதன்பின்பு, தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளதாவது:
தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமுகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 
வருங்காலங்களில் இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி சுமுகமாக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்கள் கலந்து பேசி நல்ல தீர்வை காண்போம்.
இந்த ஆண்டு மரபுப்படி அனைத்தும் நிறைவேற வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி என்பது ஒரு மரபு மற்றும் பாரம்பரிய ஆன்மிக அடித்தளத்தில் நடைபெறுகிற ஒரு நிகழ்வு. இதுவரை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி என்பது சமயம் தொடர்பான நிகழ்வு. இதில் அரசியல் செய்ய தேவையில்லை. பிற குறுக்கீடு, தலையீடு தேவையில்லை.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் உறுதி உளித்துள்ளார். முதலமைச்சரும் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார். அரசு, மடம், ஆதீனம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆண்டு வழக்கம்போல் இந்த விழா சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.