கடைகளில் சேகரிக்கப்பட்ட உணவில் ஷிகெல்லா வைரஸ் கண்டுபிடிப்பு- கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற சிறுமி திடீரென இறந்தார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் ஷவர்மா விற்பனையகங்களில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ஷவர்மா மற்றும் மிளகுத் தூள் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்தனர்.

இந்த உணவகத்தில் உணவு உட்கொண்ட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சேகரிக்கப்பட்ட உணவுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் நோய்க்கிருமி சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா ஆகியவை சிக்கன் ஷவர்மாவில் காணப்பட்டது. இதற்கிடையில், மிளகு தூளில் சால்மோனெல்லா கண்டறியப்பட்டது. இந்த மாதிரிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘பாதுகாப்பற்றவை’ என சான்றளிக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்திய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், இந்த விசயம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதற்கிடையில், விதிமீறல் செய்பவர்களைக் கண்டறிய மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் அதிகாரிகள்  சோதனைகளை நடத்தினர். மேலும், 32 கடைகள் உரிமம் அல்லது பதிவு இல்லாமல் இயங்கியதை அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எர்ணாகுளம், திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய இறைச்சி, மீன் உள்ளிட்ட பழமையான உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெடுமங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் கேன்டீன் மற்றும் தங்கும் விடுதியில் இருந்து சுமார் 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிமம் இல்லாமல் செயல்பட்டதால் திருவனந்தபுரம் நகரில் ஓட்டல் ஒன்று மூடப்பட்டது. கொச்சியில் உள்ள பல ஓட்டல்களில் பழமையான உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மரடுவில் உள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக பழமையான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விடுதிகள் தூய்மை விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவது கவனத்திற்கு வந்தது. இடுக்கியில் உரிமம் இல்லாததால் 4 ஓட்டல்கள் மூடப்பட்டன. செருதோனியில் இருந்து 10 கிலோ அழுகிய மீன் கைப்பற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.