நான் சேட்டைக்கார ‛டான்'… சிரிக்கும் சிவகார்த்திகேயன்

'ஹே ஜலபுல ஜங்கு… டேய் டம டம டாங்கு… தப் லைப்ல கிங்கு டான் செட்டிங்கு'… என சேட்டை, காமெடி, காதல் காட்சிகளில் கலக்கி ஜாலியான நடிப்பால் ரசிகர்களிடம் 'எங்கள் வீட்டு பிள்ளை' என பட்டம் வாங்கிய சிவகார்த்திகேயன் 'டான்' குறித்து மனம் திறக்கிறார்…

'டான்'… டைட்டிலே பயமா இருக்கே
ஆமா… ஜாலியான காலேஜ் கதைக்கு தான் பயப்படுற அளவுக்கு டைட்டில் வைச்சிருக்கோம். படம் முழுக்க அந்த டைட்டிலின் எனர்ஜி இருக்கும், காலேஜில் ஒரு மாணவனை 'டான்' போல காட்டி கதை பண்ணியிருந்தார் இயக்குனர் சிபி. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலா நடிச்சிருக்காங்க.

முதல் பட அறிமுக இயக்குனரோடு வேலை…
இயக்குனர் சிபிக்கு சினிமா மேல் பெரிய வெறி, காதல். ஜெயிக்குற ஆர்வம் இருக்கு. அவரோட பயணிக்கும் போது எனக்கும் அந்த எனர்ஜி வந்த மாதிரி பீல் பண்றேன். நம்ம இத்தனை படம் பண்ணி இருக்கோம்ங்குறதை மறந்து நாமும் இவங்க வேகத்துக்கு ஓடுவோம்.

எப்படியெல்லாம் கதை இருக்கணும்னு நினைப்பீங்க
குடும்பத்தோடு பார்க்குற மாதிரி இருக்கணும். என் கல்லுாரி வாழ்க்கையில் நண்பர்களோடு நடந்த சம்பவங்களை நினைத்து பார்த்து தான் டான் ஓ.கே., பண்ணினேன். 'டான்'னா அடிதடி எல்லாம் பண்ற பெரிய ஆள் கிடையாது சேட்டை பண்ற, கடைசி பெஞ்சில் இருக்கிற ஒருத்தன் தான் டான்.

அனிருத், சிவா கூட்டணி ஹிட்…
பாட்டு ஹிட்டாக என்ன தேவையோ அதை தான் டிஸ்கஸ் பண்ணுவோம். அனிருத்துக்கு ஜாலியா பாட்டு பண்ண பிடிக்கும். வார்த்தைகள் கூட போட்டு கொடுப்பார். 'செல்லம்மா செல்லம்மா' கூட அவர் சொன்ன வார்த்தை தான். அதுக்கப்புறம் நான் எழுதினேன்.

ஸ்ரீதிவ்யா, பிரியங்கா மோகனுக்கு 2 படங்கள் வாய்ப்பு
ஒரு படத்தின் பாடல்கள் ஹிட் ஆகும் போது ரசிகர்களுக்கு அந்த ஜோடி பிடிக்க ஆரம்பிக்கிறது அப்படி தான் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி, பிரியங்கா வரை நடக்குது. இதுல ஒரு பெரிய விஷயம் அந்த 3 பேருக்குமே தமிழ் நல்லா தெரியும் .. காமெடியும் வரும்.

நடிகர்கள் சம்பள உயர்வு குறித்து…
முதல் பட வெற்றி சம்பளம் நிர்ணயிக்கும். அப்போ தான் தயாரிப்பாளர்களே அடுத்த படத்துக்கு அதிக சம்பளம் கொடுப்பாங்க. சம்பளத்திற்கு ஏற்ப எப்படி உழைக்கிறதுனு தான் பார்க்கணும். படம் எப்படி ஓடுதோ அதை வைச்சு தான் நடிகர்களின் மார்க்கெட் இருக்கும்.

கே ஜி. எப்., ஆர்.ஆர்.ஆர். பார்த்து என்ன உணர்ந்திங்க
எங்கேயுமே கன்னடம் பேசி எடுத்து இருக்காங்கன்னு தோணலை, ஆர்.ஆர்.ஆர்., படமும் அப்படி தான். இது போன்ற படங்கள் பார்க்கும் போது நமக்கு ஒரு உணர்வு வருவது போல் 'எந்திரன்' படம் பார்க்கும் போது ஒரு உணர்வு வருது. நானும் பெருசா யோசிக்க ஆம்பிச்சுட்டேன். ரஜினி உடன் நடிக்கும் ஆசையும் இருக்கு.

'பான் இந்தியா' படங்கள் பற்றி…
நல்ல படங்கள் வர 'பான் இந்திய' படங்கள் உதவும். இன்னும் பெரிய வித்தியாசமான கதை கொண்ட படங்கள் பண்ற தைரியத்தை கொடுத்திருக்கு. அடுத்த நம்ம நடிப்பில், அதிக பட்ஜெட்டில் 'அயலான்' வருது…

நடிகர்கள் தயாரிப்பாளராகி கடன் சுமையில் இருக்காங்களே
நடிகனா மட்டும் இருக்கேன்னு ரிஸ்க் எடுக்காம எதுவும் பண்ண முடியாது, நான் கூட டிவியில் நல்ல சம்பளம் வாங்கினேன். அடுத்த கட்டம் போக முடிவு எடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.