‘மாயமில்லை மந்திரமில்லை… இதோ பாருங்க ஒரு பேப்பரை சுக்கு நுாறாக கிழிக்கிறேன்’ என கிழி, கிழி என கிழித்து விட்டு மின்னல் வேகத்தில் கிழியாத பேப்பரை கண்முன் கொண்டு வந்து வியக்க வைத்து விடுகிறார் கண்களால் மயக்கும் மந்திரக்காரர்… விரல்களில் தந்திரம் நிகழ்த்தும் ஜாலக்காரர் மதுரை மேஜிக் கவிதா என்ற கவி.
எப்படியாவது மேஜிக் டிரிக்ஸ்சை கண்டுபிடித்துவிடலாம் என பேச்சு கொடுத்தோம்… ”சொந்த ஊர் மதுரை. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என துணிந்து மேஜிக் கலைஞரான என் அண்ணன் சங்கர்லாலிடம் மேஜிக் கற்றேன்.
கடந்த 7 ஆண்டுகளாக 30 கிலோ மேஜிக் பொருட்கள் அடங்கிய பெட்டியை தனியொரு பெண்ணாக சுமந்து பல இடங்களுக்கு சென்று மேடைகளில் மக்களை மகிழ்விக்கிறேன். இல்லாத கலர் குடைகளை திடீரென வரவழைப்பது, புத்தகத்தை திறந்ததும் தீ பிடிக்க வைப்பது, வாயில் இருந்து கலர் பேப்பர் எடுப்பது என 30க்கும் மேற்பட்ட மேஜிக் அத்துப்படி. தினமலர் வாசகியான நான் பேப்பரை மறைய வைத்து மீண்டும் கொண்டு வரும் மேஜிக்கிற்கு தினமலர் நாளிதழ்தான் பயன்படுத்துகிறேன்.
ஒவ்வொரு மேஜிக் செய்யும் போதும் அதற்கு ஏற்ப முகபாவங்களை மாற்றி, நடனம் ஆடி என்னை நானே மறந்து போவேன். தனியொரு பெண்ணாக ஆண்களுக்கு நிகராக இவள் சாதிப்பது எப்படி என பல போட்டி, பொறமைகளுக்கு நடுவில் கலைத் தாயின் கரம்பிடித்து பயணிக்கிறேன். எப்படியோ தமிழகத்தின் முதல் பெண் மேஜிக் கலைஞர் என பெயர் வாங்கியதில் பெரும் பெருமை. இனி என்ன தயக்கம்…’உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு’….என்ற நம்பிக்கை வரிகளை சுமந்து ஓடுகிறேன்… என மேஜிக் டிரிக்ஸ்களை முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விட்டு அடுத்த மேடையைதேடி ஓட துவங்கினார் கவி.
Advertisement