4 ஆண்டுகளாக கடனுதவி வழங்காத புதுச்சேரி மகளிர், ஊனமுற்றோர் மேம்பாட்டுக் கழகம்: ஆர்டிஐயில் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுத்துறையான மகளிர், ஊனமுற்றோர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 4 ஆண்டுகளாக மகளிருக்கு கடனுதவி ஏதும் தராத நிலையில் ஊதியம், வாடகைக்கு மட்டுமே ரூ.46.5 கோடி செலவிட்டதாக ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரி மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக் கழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி செலவினத்தில் ஊழியர்களுக்கு ஊதியம், அலுவலக வாடகைக்கே ரூ. 46.5 கோடியை ஆண்டுதோறும் செலவிடும் சூழலில் நான்கு ஆண்டுகளாக மகளிருக்கு கடனுதவியே தரவில்லை. ஊனமுற்றோருக்கு ரூ. 88 லட்சம் மட்டுமே கடன் தந்துள்ளனர். இதுபற்றி மத்திய உள்துறைக்கு புகார் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் அரசு நிறுவனமாக செயல்பட்டு வரும் மகளிர் மற்றும் ஊனமுற்றோர் கழகத்திற்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி, அக்கழகத்தினர் முறைகேடாக செலவிடப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தன. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்தார்.

அதில் கிடைத்த தகவல்கள் தொடர்பாக அவர் கூறியதாவது: ”ஆர்டிஐயில் கிடைத்த தகவலின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-22 ஆண்டு வரை மத்திய அரசு நிதி ஏதும் மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. மாநில அரசு மட்டும் கடந்த 4 ஆண்டுகளுக்கு ரூ.182.03 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

கடந்த 2019 முதல் 2022 வரையிலான நிதி ஆண்டுகளில் மகளிர்களுக்கு கடனுதவி ஏதும் வழங்கப்படவில்லை. ஊனமுற்றோர்களுக்கு மட்டும் 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.88.56 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளதாகவும், 2019-ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஊனமுற்றோர்களுக்கும் எந்தவித கடனும் வழங்கவில்லை. இந்த அலுவலகத்திற்கு மாத வாடகை ரூ.99,000/- வீதம் ஆண்டிற்கு ரூ.11,88,000/ லட்சம் வீதம் செலுத்தி வருகின்றனர். இந்த மேம்பாட்டுக் கழகத்தில் பணிபுரிந்து வரும் 1367 நிரந்தர ஊழியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.45.5 கோடி ஊதியமாக வழங்கி வருவதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

குறிப்பாக மத்திய அரசு இந்த மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஏதும் ஒதுக்காத நிலையில் மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல், மாநில அரசு மகளிர் மற்றும் ஊனமுற்றோர்களின் மேம்பாட்டிற்கு ஒதுக்கிய நிதி ரூ.45,62,31.788 கோடி முழுவதையும் வாடகை, ஊழியர்களுக்கு ஊதியம் என செலவிட்டு வருவதால் மகளிருக்கோ, ஊனமுற்றோருக்கோ இந்த மேம்பாட்டுக்கழகத்தால் எந்தவித பயனும் இல்லை.

எனவே மகளிர் மற்றும் ஊனமுற்றோருக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர்களின் மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும். இந்த அலுவலகத்தை அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய உள்துறை, ஆளுநர் மற்றும் டெல்லியிலுள்ள தலைமை ஊழல் ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.