கட்டடம் கட்டுவதற்கு வங்கிக்கடன் பெற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு ஒப்புதல்

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட வங்கிக்கடன் பெறுவதற்கு அந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடந்தகால கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து பல புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றனர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடங்க பொதுக்குழுவில் திட்டங்களை முன்வைத்தனர். மேலும் நடிகர் சங்க கட்டடம் ஆரம்பத்தில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்றன. அதில் தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்து பாதியில் நிற்கின்றது. அதற்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி பொதுக்குழுவில் கூறினார்.

image

அத்துடன் தற்போது கம்பி, சிமென்ட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் இரட்டிப்பாகி உள்ளன.  இதன்காரணமாக மீதமிருக்கும் 30 சதவீத பணிகளை முடிக்க,  மேலும் 30 கோடி ரூபாய் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கிக்கடன் பெற பலரும் ஆலோசனை கூறினார்கள். அதுவே தற்போது இருக்கும் வழி. எனவே பொதுக்குழுவின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று கூறினார்.

அதேபோல் விஷால் பேசுகையில், அப்போதே 6 மாத காலம் கிடைத்திருந்தால் நடிகர் சங்க கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும், செலவுகள் குறைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தேர்தல் முடிந்து தேவையில்லாமல் வழக்கு தொடரப்பட்டன. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை இருந்திருந்தால் கட்டடம் கட்டியிருக்கலாம், உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம்.  ஆனால் உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தினர். இருந்தபோதிலும் பாண்டவர் அணி கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும். விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

image

இன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு சிறப்பு விருது கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  அதேபோல் சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ’தாதா சாகேப் பால்கே விருது’ வென்று இருக்கும் ரஜினிகாந்த்திற்கும் பாராட்டு தெரிவித்தனர். அவர் நேரில் இதை வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும், வீடியோ வாயிலாக நடிகர் சங்கத்திற்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார். அத்துடன் நாசர் தலைமையிலான அணியினர் திட்டமிட்டுள்ள அனைத்து பணிகளையும் முடிக்க வாழ்த்துக்கள் என்றும் அவர் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார்.  

பொதுக்குழு கூட்டம் முடிவடைந்து நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் கட்டட பணிகளை மூன்று மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினர். அத்துடன் கட்டட வேலைகள் முடிவடைந்து திறக்கப்பட்டால், கட்டடத்திற்காக வாங்கப்படும் கடன் இ.எம்.ஐ கட்டியது போக ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் இருக்கும் என்று பொருளாளர் கார்த்தி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.