ஜிப்மர் மருத்துவகல்லூரியில் அலுவலக கோப்புகள் அனைத்தும் இனி இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருப்பதாகச் செய்திகள் வருகின்றன, இதனை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புதுச்சேரி ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (ஜிப்மர்) இயக்குநர் அலுவலக கோப்புகள் அனைத்தும் இனி இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இதுநாள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் கோப்புகள் எழுதப்படும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது இயக்குநரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஜிப்மருக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள். இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்குத் துணை போகும் ஜிப்மர் இயக்குநரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உடனடியாக அந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM