மாடலாக இருந்து சினிமாவுக்குள் வந்து இன்று பலருக்கு ரோல் மாடலாக உயர்ந்திருப்பவர் நயன்தாரா.
டயானா மரியம் குரியன் என்பதுதான் இவரின் இயற்பெயர்.ஆனால், சினிமாவுக்காக வேறு பெயர் வேண்டும் என 30 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்வான பெயர்தான் நயன்தாரா. நட்சத்திரக் கண்கள் என்று இதற்கு அர்த்தம்.
கேரளாவில், சி.ஏ படித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாடலிங் வாய்ப்பு வந்து, சில பல விளம்பரங்களில் தலை காட்டியிருக்கிறார்.
மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுதான் நயன் தாராவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அவரது ‘மனசினக்கரெ’தான் நயனின் முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட்
தமிழில் `ஐயா’ படத்தில் அறிமுகம். அடுத்த படமே ரஜினிகாந்துக்கு ஜோடி. `அது எவ்ளோ பெரிய விஷயம்னுகூட அப்பெல்லாம் தோணினதில்ல’ என்பார் நயன்.
நயன்தாராவுக்கு நம்பிக்கையில்லாத விஷயம், யாருக்கும் அட்வைஸ் சொல்வது. “அட்வைஸ் சொல்வது, அட்வைஸ் கேட்பது ரெண்டுமே போர். எனக்கு அதுல நம்பிக்கை இல்ல” என்பார்.
நயன்தாரா தான் மதிக்கும் நடிகர்களாக அடிக்கடி சொல்லும் இருவர் ரஜினி, அஜித். ‘ஹீரோயின்னு இல்ல. பொதுவாகவே பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதைதான் காரணம்’ என்பார்.
திகில் படங்கள் பார்ப்பதென்றால் நயன்தாராவுக்கு எப்போதுமே பயம். ஆனால், பிடித்த ஜானரும் திகில்தான். ‘யாராவது கூட இருக்கணும். ஹாரர் மூவின்னா பிடிக்கும்’ என்கிறார்.
முதல்படத்தின்போது தமிழ் கொஞ்சமும் தெரியாது. இன்றைக்கு மலையாள சேனல் பேட்டிகளின் போதுகூட, நடுநடுவே தமிழ் வருகிற அளவுக்குத் தமிழ்ப்பெண்ணாகிவிட்டார். பலரும் பலமுறை சொன்னபோதும் சொந்தக்குரலில் பேசத் தயங்கியவர், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் அந்தத் தடையை உடைத்தார்.
“மகிழ்ச்சியாக இருக்கும்போது யார் நம்மோடு இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் யார் கூட இருக்கிறார்களோ, அவர்கள்தான் முக்கியம்” என்பது நயன் பஞ்ச்.
ரோல்மாடல் என்று யாரையும் சொல்லிக்கொள்ள மாட்டார். ஆனால், பிரிட்டிஷ் நடிகை Audrey Hepburn மீது மிகப்பெரும் மரியாதை உண்டு.