கோலி பிறந்தது டெல்லியில். அப்பா கிரிமினல் வழக்கறிஞர். அண்ணன், அக்காவுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி கோலி.
சச்சின், ஷேவாக், கங்குலி, அசாருதின் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைலைத் தீவிரமாகப் பின்பற்றுவதால் கோலியிடம் நான்கு பேரின் ஸ்டைலையும் பார்க்கமுடியும்.
பல பாராட்டுகளைப் பெற்றாலும், விராட் பிரியமாய் நினைப்பது விவியன் ரிச்சார்ட் சொன்னது. விராட் கோலி தன்னைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ரிச்சர்ட்ஸ்.
கிரிக்கெட்டுக்கு அடுத்து ஃபுட்பால், டென்னிஸ் இரண்டுமே பிடித்த விளையாட்டுகள். இந்தியன் சூப்பர் லீகின் கோவா டீமின் இணை உரிமையாளராகவும், டென்னிஸில், UAE ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.
கர்நாடகாவுக்கு எதிராக ரஞ்சி போட்டியின்போது தந்தையின் மரணச்செய்தி திடீரென வந்தது. ஆனால் அடுத்தநாள் மைதானத்துக்கு மீண்டும் வந்த கோலி 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த பின்பே அப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் விராட், தனது மனதுக்குப் பிடித்த சாதனையாகக் குறிப்பிடுவது, தனது முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே சதம் அடித்தது.
விராட் கோலி சொல்லும் பன்ச்: “தினமும் கடின உழைப்பை வெளிப்படுத்தினால், யாருக்கும் பதில் சொல்லத் தேவையிருக்காது!”
டிரஸ்ஸிங்கில் மிகவும் ஆர்வம் கொண்ட கோலிக்குப் பிடித்த டிரஸ்ஸிங் ஆளுமை, அமெரிக்காவின் பாடகரும் நடிகருமான ஜஸ்டின் டிம்பர்லேக்.
நேரம் கிடைக்கும்போது டிவியும் பார்ப்பதுண்டு. குறிப்பாக சீரிஸ் ரசிகர். அமெரிக்காவின் த்ரில்லர் சீரிஸான ‘ஹோம்லேண்ட்’ (Homeland) கோலியின் ஃபேவரிட். அடுத்த இடத்தில் இருப்பது ப்ரேக்கிங் பேட். (Breaking Bad.)
உலகத்தில் எந்த நாட்டுக்கும் போகப்பிடிக்கும் என்பவர், போக விரும்பும் இடமாகக் குறிப்பிட்டது, விண்வெளியை. “அங்கே போய் என்ன இருக்கிறதென்று பார்க்க ஆவல்” என்கிறார் கோலி.