
பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் மொழியின் முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இந்நாவல், 1879 ல் வெளியானது.

பொய்த்தேவு மனித மனதின் சிடுக்குகளை அலசும் இந்நாவலை கா.ந.சுப்ரமண்யம் எழுதியுள்ளார். இதனை, வெறும் அனாதை ஏழைப்பையனின் விபரீத ராஜயோகத்தையும் மனிதனாகி அவனடைந்த வீழ்ச்சியையும் பற்றியது என சுருக்கிவிட முடியாது.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன் எழுதிய நாவல்களுள் ஒன்று. ஹென்றி என்ற இந்நாவலின் மைய கதாபாத்திரம் மானுடத்தின் அரிய பாத்திரப்படைப்புகளுள் ஒன்று என பலராலும் பாராட்டப் பெற்றது.

ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி எழுதிய இந்நாவல் சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகான கால கட்டத்தை ஒரு புளியமரத்தோடு தொடர்புடைய பல நிகழ்வுகளைத் தொகுத்து நமக்குத் தருகிறது.

கடல்புரத்தில் – இந்நாவலில் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கை பாடுகளை, அவர்தம் மகிழ்ச்சியை, துயரை , காதலை அன்பு தோய்ந்த மொழியில் கூறியிருப்பார் எழுத்தாளர் வண்ணநிலவன்.

புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் எழுதிய நாவல் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்து எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். இரண்டாம் உலகப்போரின் காலத்தை நம் கண்முன்னே நிகழ்த்தும் களம்.

மோகமுள் – `மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோகமுள்’ தமிழில் நல்லதோர் சாதனை’ என்கிறார் க.நா.சு

நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜனின் தனித்துவமான நடையும், பூச்சுகளற்ற மொழிநடையும் சிறப்பாக அமையப்பெற்ற நாவல். சமூகத்தில் உதிரிகளாக வாழ்கின்ற மனிதர்களின் வாழ்வை புனைவாக்கி இருப்பார்.

தாகம் – கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவல் முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து வாசகர்களின் உணர்ச்சியை நிலையற்றதாக மாற்றுகிறது.

தண்ணீர் – அசோகமித்திரனின் இந்நாவல் பேசுவது தமிழுக்கு புதிய களம் இல்லை. ஆனால் இதன் அடுக்குகளும் நாவல் கதாபாத்திரங்கள் வழியே அவர் பேச முயல்வதும் ஆழமானது.