குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க விரைவில் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் விரைவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பிறகு, 41-வது வார்டு ரேவதி நகர் பகுதியில் கட்டமைக்கப்பட்ட 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம், 83-வது வார்டு ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.5.59 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 9 பணிகள் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.49.62கோடி மதிப்பீட்டிலான 263 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை மாநகராட்சியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பில்லூர் குடிநீர் 3-வது திட்டம்ரூ.700 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.

ஓராண்டுக்குள் இப்பணிகள் நிறைவு பெறவுள்ளன. ரூ.144 கோடியில் பிரதான சாலைகளை இணைக்கும் திட்டம், ரூ.200 கோடியில் செம்மொழிப் பூங்கா உட்பட பல்வேறு திட்டங்கள் கோவையில் வரவுள்ளன. குறிச்சி குளத்தில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி விரைவில் மேம்பாட்டு பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ளது. கோவைக்கு கூடுதல் தண்ணீரைப் பெறும் வகையில் விரைவில் தமிழக அரசு அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்வு எட்டப்படும்.

கோவை மாநகராட்சியில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மீதான புகார்கள் குறித்து தனியாக ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. அவர் அளிக்கும் அறிக்கையின்படி எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, சென்னை, மதுரைமாநகராட்சிகளில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப் படவுள்ளது” என்றார்.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறும்போது, “கோவை மாநகரில் ரூ.196 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விடுபட்ட பகுதிகளில் விரைவில் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். இதற்கான சிறப்பு நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்” என்றார்.

முன்னதாக, மாநகராட்சியின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார். ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.