மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனம் – வலுக்கிறது எதிர்ப்பு

மனநலம் சற்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள விமான நிலையத்துக்கு கடந்த 7-ம் தேதி தனது 10 வயது மதிக்கத்தக்க மகனுடன் பெற்றோர் இருவர் வந்துள்ளனர். அந்த சிறுவன் சற்று மனநலம் பாதிக்கப்படடவர் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் அவர் சிறிது பயந்த மனநிலையில் இருந்துள்ளார். அவருடன் அவரது பெற்றோர் தங்களின் இண்டிகோ விமானத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனின் நடவடிக்கையை கண்ட இண்டிகோ நிறுவனத்தினர், அவரது பெற்றோரை அழைத்து அவர்களின் மகனை விமானத்தில் ஏற்றினால் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவர் என்றும், எனவே திரும்பிச் செல்லும்படியும் கூறியுள்ளனர்.
image
இதனால் சிறுவனின் பெற்றோருக்கும், இண்டிகோ நிறுவனத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட மற்ற பயணிகள், அந்த சிறுவனக்கு ஆதரவாக பேசியுள்ளனர். சிறுவன் வருவதால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத இண்டிகோ நிறுவனம், அந்த சிறுவனை விமானத்தில் ஏற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் விமான நிலையத்தில் அரை மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
ஃபேஸ்புக்கில் புகார்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சக பயணியான மனீஷா குப்தா என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளி சிறுவனுடன் பயணிப்பதில் சக பயணிகளான எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இண்டிகோ நிறுவனத்தின் மேலாளர்தான் தொடர்ந்து கத்திக் கொண்டும், அந்த சிறுவனை கட்டுப்படுத்த முடியவில்லை என அனைவரிடமும் கூறிக்கொண்டும் இருந்தார். எங்களுடன் பயணிக்கவிருந்த மருத்துவர்கள் சிலரும், அந்த சிறுவனை தாங்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தனர். ஆனால், இண்டிகோ நிறுவனத்தினர் இதனை ஏற்கவில்லை. எந்தப் பயணியிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை செல்போனில் நாங்கள் காட்டினோம். எனினும், அதற்கும் இண்டிகோ நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை. சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் ஒரு தவறான அல்லது மரியாதை குறைவான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை என அந்தப் பதிவில் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பதிவை படித்த ஆயிரக்கணக்கானோர், இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
image
இண்டிகோ விளக்கம்
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அதில், “மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மாற்றுத்திறனாளி சிறுவனை மே 7-ம் தேதியன்று விமானத்தில் பயணிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. எங்கள் நிறுவன அதிகாரி, அந்த சிறுவனை கட்டுப்படுத்த கடைசி நிமிடம் வரை முயற்சி செய்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே, அவரை ஓட்டல் ஒன்றில் தங்க வைத்து அதற்கு அடுத்த தினம் அவர்கள் செல்லும் இடத்துக்கு நாங்கள் விமானத்தில் அனுப்பி வைத்தோம்” என இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.
இந்த சூழலில், இசம்பவம் குறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.