ஒற்றை வேட்பாளர் போட்டியிட்ட தேர்தலில் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு

ஹாங்காங் :

ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட ஒற்றை நபர் அவர்தான். ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இயங்கி வந்தது. ஆனால் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை இங்கிலாந்து ஒப்படைத்தது. அது முதற்கொண்டு ஹாங்காங், சீனாவின் இரு சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. மற்றொன்று மக்காவ்.

ஹாங்காங்கை சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தபோது விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை, அங்கு சுந்திரம் இருக்க வேண்டும், பேச்சு சுதந்திரம் போன்ற உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் அந்த உத்தரவாதம் இப்போது எழுத்து அளவில்தான் உள்ளது, ஹாங்காங் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை, கடுமையான சட்டங்களை சீனா அமல்படுத்தி உள்ளது. சீனா தேர்தல் என்ற பெயரில் ஒன்றை நடத்தி, தலைவரை (தலைமை நிர்வாகி) அறிவித்து, அவரைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

அங்கு 2017-ம் ஆண்டு முதல் தலைவர் பதவியில் கேரி லாம் இருந்து வந்தார். சீனாவின் தீவிர ஆதரவாளர் இவர். இவர் பதவிக்காலம் முடிந்தது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் மீண்டும் களம் இறங்கப்போவதில்லை என்று கேரி லாம் அறிவித்து விட்டார்.

இதையடுத்து இந்த தேர்தலில் சீனாவின் தீவிர ஆதரவாளரான ஜான் லீ கா சியு (வயது 64) களம் இறக்கப்பட்டார். சுமார் 1,500 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் தான் (ஒட்டுமொத்தமாக அனைவரும் சீன ஆதரவாளர்கள்தான்) புதிய தலைவரை ரகசிய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த தேர்தலில் ஜான் லீ மட்டுமே போட்டியிட்டார். வேறு யாரும் போட்டியிடவில்லை. எனவே தேர்தலில் கவுன்சில் உறுப்பினர்கள் ஜான் லீயை ஆதரிக்கிறோம் அல்லது ஆதரிக்கவில்லை என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். நேற்று காலை 9 மணிக்கு தேர்தல் நடந்தது. உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டது.

ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1,416 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஹாங்காங் மீதான தனது பிடியை சீனா இன்னும் இறுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அங்கு சீனாவுக்கு எதிராக ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியபோது ஒடுக்குமுறைகளை பார்வையிட்டவர் இவர்.

ஜான் லீ, ஹாங்காங்கின் பாதுகாப்பு துறை செயலராக, நகரின் இரண்டாவது உயர் பதவி நிர்வாகியாக இருந்தார். தனது 20 வயதுகளில் போலீஸ்படையில் சேர்ந்து உயர்ந்தவர் இவர். 2019-ம் ஆண்டு ஹாங்காங் மீது சீனா கொண்டு வந்த ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து நடந்த போராட்டங்களை ஒடுக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

2020- ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்தபோதும் இவர் தீவிரமாக ஆதரித்தவர் ஆவார். இதனால் அமெரிக்கா அவருக்கு பொருளாதார தடை விதித்தது. அவரது தேர்தல் பிரசாரத்தை யூ டியூப் முடக்கியது. ஜான் லீ தலைவராகி இருப்பது ஜனநாயக சார்பு ஆதரவாளர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.