வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சூர்: கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற குடைகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெற்றதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பூரம் திருவிழா, யானைகளின் அணிவகுப்பு, குடைமாற்றம் மற்றும் வாணவேடிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான பூரம் திருவிழா இன்று (மே 9) முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ‘திருச்சூர் பூரம்’ நாளை மாலை நடக்கிறது.
இதையொட்டி, பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடை மாற்றத்திற்காக விதவிதமான அலங்கரிக்கப்பட்ட குடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில், மகாத்மா காந்தி, பகத் சிங், கேரளாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உட்பட சுதந்திர இயக்கத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த வரிசையில் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்தது. குடையில் சாவர்க்கர் படம் இருப்பதற்கு அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், கோவில் நிர்வாகம் அக்குடைகளை காட்சிப்படுத்துவதை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Advertisement