
மாணவனின் மூன்று வருட படிப்பு செலவை ஏற்ற தமன்
தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் தற்போது தெலுங்கு திரையுலகத்திற்கு சொந்தக்காரராக மாறி முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு படத்திலும் குறைந்தபட்சம் ஒரு சூப்பர்ஹிட் பாடலையாவது கொடுத்து ரசிகர்களின் இசையமைப்பாளராக வலம்வரும் தமன், இன்னொரு பக்கம் சின்னத்திரையில் தெலுங்கு இந்தியன் ஐடல் என்கிற பாடல் போட்டிக்கான ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆகவும் பங்கு பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டியில் கலந்துகொண்ட ரேணுகுமார் என்பவர் தனது அற்புதமான குரல் வளத்தால் தமன், இன்னொரு ஜட்ஜான நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வசீகரித்தார். மேலும் அவர் மேடையில் பேசும்போது கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும் தனது மகனின் படிப்பு செலவுக்கு கூட சிரமப்படுவதாகவும் கண்கலங்க தெரிவித்தார்.
இதைக்கேட்டதும் உடனே மகனின் படிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம் இனி வருகின்ற அவரது 3 வருடத்திற்கான படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே உறுதி கொடுத்து ரேணுகுமாரை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தார் இசையமைப்பாளர் தமன்.