மதுபானம் அருந்தியும் போதை ஏறவில்லை என்று கூறி மதுக்கடை மீது அமைச்சரிடம் ஒருவர் புகார் அளித்த விசித்திர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேந்திர சோதியா (50). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு மதுக்கடையில் மதுபானம் வாங்கியுள்ளார். அன்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்ற லோகேந்திர சோதியா மது அருந்தி இருக்கிறார். இரண்டு குவார்ட்டர்களை முடித்தபோதிலும், அவருக்கு போதை ஏறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த லோகேந்திர சோதியா, போலி மதுபானத்தை தன்னிடம் கொடுத்து மதுபானக் கடைக்காரர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்துள்ளார்.
இதற்கு அடுத்த தினமே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவுக்கு லோகேந்திர சோதியா புகார் கடிதத்தை அனுப்பினார். அதில், “வழக்கமாக, ஒரு குவார்ட்டர் மதுபானம் குடித்தாலே எனக்கு போதை ஏறிவிடும். ஆனால் இரண்டு குவார்ட்டர்களை அருந்தியும் எனக்கு போதை ஏறவில்லை. எனவே நான் குடித்தது போலி மதுபானம் என்பது தெளிவாகிறது. எனவே, எனக்கு போலி மதுபானத்தை விற்ற கிஷிர்சாகர் பகுதியில் உள்ள மதுக்கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி பல அமைப்புகள் தற்போது போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மதுபானம் அருந்தி போதை ஏறவில்லை என அமைச்சரிடமே ஒருவர் புகார் அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM