டெல்லி: அகில இந்திய அளவில் கோதுமை மாவின் மாதாந்திர சராசரி சில்லறை விற்பனை விலை 32 ரூபாய் 38 காசுகளாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2010ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டுக்கு வெளியே கோதுமை மாவிற்கான தேவை அதிகரித்திருப்பதும் ஆனால் உள்நாட்டில் அதன் உற்பத்தி மற்றும் இருப்பு அளவு வீழ்ச்சியடைந்திருப்பதுமே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. மாநில குடிமை பொருள் விநியோக துறைகள், ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ள விவரத்தின்படி கடந்த மாதத்தில் நாடு முழுவத்திற்குமான கோதுமை மாவின் சராசரி விலை 32 ரூபாய் 38 காசுகளாகும். இது கடந்த ஆண்டு விலையை விட 9.16 சதவீதம் கூடுதலாகும். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 59 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக மேற்குவங்கம் புருலியாவில் கிலோ கோதுமை மாவின் விலை 22 ரூபாயாகவும் உள்ளது. மெட்ரோ நகரங்களின் சராசரி விலையாக மும்பையில் ஒரு கிலோ கோதுமை மாவு கிலோ 49 ரூபாய்க்கும், இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 32 ரூபாயாகவும் இருக்கிறது. கொல்கத்தாவில் 29 ரூபாயாகவும், டெல்லியில் 27 ரூபாயாகவும் ஒரு கிலோ கோதுமை மாவு இருக்கிறது.