டெல்லி:
மக்கள் போராட்டம் காரணமாக டெல்லி சாகீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி சாகீன் பாக் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் அனுமதி பெறாத சட்டவிரோத கட்டங்களை இடிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணி இன்று காலை தொடங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டதால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான், எங்கள் வேண்டுகோளின் அடிப்படையில் மக்கள் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை காலி செய்துவிட்டனர். இப்போது ஏன் கட்டிடங்களை இடிக்கும் பணி நடக்கிறது? இது வெறும் பா.ஜ.கவின் அரசியல் தான் என கூறினார்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை சாகீன் பாக் பகுதியில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்க முற்பட்ட நிலையில், போதிய போலீசார் பாதுகாப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டிடங்களை இடிப்பதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது.