சென்னை: தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளதாகவும், கடந்த 2020-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்த நிலையில், கடந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 2021ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் 1982 புகார்களும், 2020 ஆம் ஆண்டில் 2025 புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 2421 புகார்களும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமை தொடர்பாக மட்டும் 875 புகார்கள் பதிவாகி உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சட்டத்தின் படி 2019 ஆம் ஆண்டு 2396 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 3090 புகார்களும், 2021 ஆம் ஆண்டு 4469 வழக்குகளும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 3425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.