சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் பலியான பெண்.. மெடிக்கல் ஷாப்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நான்கு மாதமாக கருவுற்று உள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநத்தம் வந்துள்ளனர். அப்போது கருவில் உள்ளது பெண் குழந்தை என சட்டவிரோதமாக கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 5.5.22 அன்று இராமநத்தத்திற்கு கருக்கலைப்பு செய்ய சென்றிருக்கிறார்கள் இத்தம்பதி.
image
அங்கு திட்டக்குடி அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவின் வட்டச் செயலாளரும் மருந்தகம் உரிமையாளருமான முருகன் என்பவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது மெடிக்கல் கடையில் வைத்தே அனிதாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்புக்குப் பின் காலையில் இருந்து அனிதா மயக்கத்தில் இருந்துள்ளார் ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. ஆபத்தான நிலையில் மனைவி இருந்ததால் சந்தேகமடைந்த கணவர் வேல்முருகன் இதுகுறித்து முருகனிடம் கேட்டுள்ளார். உடனடியாக முருகன் தனது காரில் பெரம்பலூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு வேல்முருகன் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது முருகன் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 2 நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் அனிதா சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (7.5.22) அன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் மெடிக்கல் கடை நடத்தி வந்த முருகன் மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத பட்டப்படிப்பு படித்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ்கள் ஏதும் மெடிக்கலில் கைப்பற்றவில்லை. மெடிக்கல் கடையில் வைத்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகனை தேடி வருகின்றனர்.
image
மெடிக்கலை பூட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், அதனை இன்று கடலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ் பாபு மற்றும் மருத்துவ குழுவினர் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் கூட்டாக சம்பந்தப்பட்ட ஓம்சக்தி மெடிக்கல் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனை மெடிக்கல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் கிராமப்புறத்தில் உள்ள சில மெடிக்களில் கருக்கலைப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிராமப்புறத்தில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க… பாக்., எல்லையில் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயற்சி… முறியடித்த எல்லை பாதுகாப்பு படைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.