சென்னை: சைபர் குற்ற புகார்கள் அதிகரித்து வருவதாகவும், சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும், ஜவாஹிருல்லா உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பையும் தாக்கல் செய்தார்.
முன்னதாக கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , காவல்துறைகளில் காலியிடங்களை நிரப்பி காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் , காவல்துறையினருக்கு மின்னணு பொருட்கள் வாங்க வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும், சட்டமன்ற பேரவையின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்பட வேண்டும், காவல்நிலை மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்றத்தின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் எத்தனை வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது, அதிமுக ஆட்சியில் நடந்த லாக்-அப் மரணங்களில் எந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளீர்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கேள்வி எழுப்பியதுடன், மயிலாப்பூர் இரட்டைக்கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்துள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கைவிளக்கக் குறிப்பில், தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை செய்யப்பட்ட வருகிறது.
2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு 748-ஆக இருந்த இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமம்.
டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் செல்போன்களின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
2011-ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது.
பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதால், குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் காரணமாக, புகார்தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங்குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதாவது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரிவிற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும் முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கான ஆணை வெளியிட்டுள்ளது.
புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணையதள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர்தொழில்நுட்ப தடயவியல் கருவிகள், மென்பொருட்கள், சமூக வலைதள ஊள்ளீட்டுக் கருவிகள் அமைக்க ரூ.6.9 கோடி செலவில் “பாதுகாப்பான நகர” திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.