சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்பு செய்த தனியார் மருந்தக உரிமையாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அனிதா. தனியார் மருந்தகத்தில் வைத்து கருக்கலைப்பு செய்தபோது, அதிக ரத்தப்போக்கு ஏற்படவே உடல் நலக்குறைவால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனிதாவின் தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
என்ன நடந்தது என்று அனிதாவின் உறவினர்களிடம் பேசினோம். “உயிரிழந்த அனிதாவுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள். மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்காக அனிதா தம்பதி கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தை நாடியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மருந்தக உரிமையாளர் முருகன், அனிதாவை கடந்த வாரம் வரச்செல்லியிருக்கிறார். அந்த நாளில் மருந்தகத்தில் தனியே உள்ள ரூமில் வைத்து, அனிதாவுக்கு ஸ்கேன் எடுத்துள்ளனர். கருவில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியுள்ளார். இதற்காக 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருப்பதால், கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர் அனிதா தம்பதி.
அதே மருந்தகத்தில் கருவை கலைக்க 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி, கடந்த வியாழக்கிழமை காலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அனிதா. அவருக்கு கருக்கலைப்பிற்கான மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரையிலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
நிலைமை விபரீதமாக, அனிதாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவரின் கணவர் வேல்முருகன், அனிதாவின் அம்மா செல்வி, ஆகியோருடன் மருந்தக உரிமையாளர் முருகனின் காரிலேயே அழைத்துக்கொண்டு, பெரம்பலூர் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு அவரை அனுமதிக்க மறுக்கவே, அனிதா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அனிதாவின் அம்மா செல்வி கொடுத்த புகாரின் பேரில், மருந்தக உரிமையாளர் முருகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான முருகனை பிடிக்க நான்கு பேர் கொண்ட தனிப்படையும் அமைத்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.