எல்ஐசி ஐபிஓ அளவைவிட 3 மடங்கு பங்குகளை வாங்க குவிந்துள்ள விண்ணப்பங்கள்

ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ள எல்ஐசி பங்குகளை போல மூன்று மடங்கு வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகித பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை விற்று கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு ஐபிஓ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சென்ற திங்கள்கிழமை முதல் கிட்டத்தட்ட 66 கோடி எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததுள்ள நிலையிலும், வரலாறு காணாத அளவில் விண்ணப்பங்கள் மலை போல் குவிந்துள்ளன. மே 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திங்கள்கிழமை (இன்று) இறுதிநாளாகும்.
அடுத்த கட்டமாக, ஐபிஓ ஓதுக்கீடுகள் முடிந்தபின் மே 17-ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும். உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 945 ரூபாய்க்கு எல்ஐசி பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு கருதுகிறது.
விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்திருப்பதால், விண்ணப்பதாரரர்களுக்கு அவர்கள் கேட்பதை விட குறைந்த அளவிலேயே எல்ஐசி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆரம்பம் முதலே ஆயுள் காப்பீடு துறையின் வேந்தராக விளங்கிவரும் எல்ஐசியின் பங்குகளை விலைக்கு வாங்க பொதுமக்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், மற்றும் அந்த மத்திய அரசு நிறுவனத்தின் ஊழியர்கள் சென்ற புதன்கிழமை முதல்
விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
image
பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய் தள்ளுபடி எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்ற வாரம் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மொத்தமாக பங்குகளை வாங்கும் “நங்கூர முதலீட்டாளர்கள்” 5,620 கோடி ரூபாய் மதிப்புள்ள எல்ஐசி பங்குகளை விலைக்கு வாங்க விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து சில்லறை முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்கள், மற்றும் பாலிசிதாரர்கள் விண்ணப்பங்களை உற்சாகமாய் சமர்ப்பித்தனர்.
விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில், பங்கு ஒதுக்கீடு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும்.உச்சப்பட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 945 ரூபாய்க்கு எல்ஐசி பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனை செய்யப்படும் கருதப்படுகிறது. எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக இருக்கும் எனவும், எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் எனவும் அரசு முடிவு செய்துள்ளது. எல்ஐசி ஐபிஓ பங்கு விற்பனையில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்கும்; 15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
– கணபதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.